உறங்கி கிடக்கும்
காங்கிரஸ்
தொண்டர்களை தட்டி எழுப்பவும், சனாதன சக்திகளை ஒடுக்கவும் வீறு கொண்டு எழுந்திருக்கிறார் ராகுல் காந்தி என காங்கிரஸ் கட்சியினர் புகழாரம் சூட்டியுள்ளனர். குமரி முதல் இமயம் வரை ”இந்திய ஒற்றுமை பயணம்” (Bharat Jodo Yatra) என்ற பெயரில்12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,500 கிலோமீட்டர் தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாத யாத்திரையை தொடங்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
கன்னியாகுமரியில் ராகுலின் பாத யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க பயணம் தொடங்கியது. வழியில் பொதுமக்கள், தொழிலாளர்கள், கட்சியினரை சந்தித்தும், கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியும் வருகிறார். குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4 நாட்களாக பாத யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி கேரள மாநிலத்தை சென்றடைந்துள்ளார்.
5ஆம் நாளான இன்று திருவனந்தபுரம் மாவட்டம் பாரசலாவிற்கு சென்றுள்ளார். அங்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் ராகுலுடன் இணைந்து நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் உற்சாகமடைந்த ராகுல் காந்தி மிகுந்த நம்பிக்கையுடன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இன்றைய தினம் முடிவில் நெய்யடிங்காராவில் உள்ள டாக்டர் ஜி.ஆர் பப்ளிக் பள்ளியில் ஓய்வெடுக்கிறார். கேரள மாநிலத்தில் மட்டும் 19 நாட்கள் பயணம் செய்கிறார். இதன்மூலம் மொத்தம் 450 கிலோமீட்டர் தூரத்தை நடைபயணத்தால் கடக்கவுள்ளார். நேற்றைய தினம் ராகுல் காந்தி தமிழகத்தை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து பேசியது
தொடர்பான வீடியோவை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா தனது ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். ஏனெனில் அந்த வீடியோவில், இயேசு தான் கடவுளின் வடிவமா? என்று ராகுல் காந்தி பாதிரியாரிடம் கேட்கிறார். அதற்கு, இயேசு தான் உண்மையான கடவுள். அவர் சக மனிதனாக, நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும் நபராக தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.
அவர் சக்தியை போல அல்ல. எனவே இயேசுவை நம்மில் ஒருவராக அடையாளம் காணலாம் என்று ஜார்ஜ் பொன்னையா பதிலளிக்கிறார். இது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசிய பாதிரியாரை ராகுல் ஏன் கண்டிக்கவில்லை? இதுதான் உங்கள் தேசிய ஒற்றுமை பயணமா? என பாஜகவினர் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.