கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் உணவு விடுதிகளில் நடத்திய திடீர் சோதனையில் 60 கிலோவிற்கும் மேற்பட்ட காலாவதியான உணவு பொருட்கள் கன்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு அபராத தொகை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இயங்கும் தனியார் உணவு விடுதிகளில் பழைய உணவு பொருட்கள் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் மூஞ்சிக்கல், டிப்போ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளில் திடீர் என ஆய்வு மேற்கொண்டார். இதில் காலாவதியான இறைச்சி பொருட்கள், சாதம், சப்பாத்தி, நூடுல்ஸ், மசாலா பொருட்கள் உள்ளிட்ட கலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு விடுதிகளில் கலாவதியான உணவு பொருட்களை வைத்திருந்த உணவு விடுதியாளர் 4 நபர்களுக்கு 3000 ரூபாய் வீதம் 12,000 ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டது.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உணவு விடுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டு 2000 ரூபாய் அபராத தொகையும் விதிக்கப்பட்டது. கொடைக்கானலில் இயங்கும் உணவு விடுதிகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.