கடந்த 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும், தனிப்பெரும்பான்மையை அக்கட்சியால் பெற முடியவில்லை. மேலும், அப்போது பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா கூட்டணியில் இருந்து விலகியது. தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து மகா விகாஷ் கூட்டணியை அமைத்தது. இந்த கூட்டணியின் தலைமையில் சுமார் 2.5 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் ஆட்சி சுமுகமாகவே சென்று கொண்டிருந்தது.
இந்த சூழலில், சில மாதங்களுக்கு முன்பு, சிவசேனாவைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் உடன் இணைந்து, மகா விகாஷ் கூட்டணியை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார். இதைத்தொடர்ந்து நடந்த அரசியல் களேபரத்தில், உத்தவ் தாக்ரே தலைமையிலான மகாராஷ்டிராவில் அரசு கவிழ்க்கப்பட்டது.
தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவின் தேவேந்திர பாட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். அதுமட்டுமன்றி, சிவசேனா கட்சியும், உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா, ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவாக பிரிந்து காணப்படுகிறது.
யார் உண்மையான சிவசேனா என்பதில் ஷிண்டே தரப்பிற்கும், தாக்கரே தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. மேலும், ஆட்சிக்கலைப்பில் ஷிண்டே ஈடுபட்டதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் மூளையாக செயல்பட்டார் என தாக்கரே தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், அமித் ஷா குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ (தாக்கரே தரப்பு நடத்திவரும்) நாளேடான ‘சாம்னா’ வெடிகுண்டு ஒன்றை போட்டுள்ளது. அதாவது, தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருந்த சரத் பவார் உதவி செய்ததாலேயே, அமித் ஷாவுக்கு 2002 குஜராத் கலவர வழக்கில் ஜாமீன் கிடைத்தாக சாம்னா வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாளேட்டில் வழக்கமாக அதன் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் தான் எழுதி வந்தார். அவர் தற்போது, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், கடக்நாத் மும்பைகர் என்ற பெயரில் கட்டுரை வெளியாகி வருகிறது.
மேலும் அந்த கட்டுரையில், “அமித் ஷா மகாராஷ்டிரா குறித்து தொடர்ந்து மோசமான கருத்துகளையே கூறி வருகிறார்.இது மகாராஷ்டிரா மீதான அவரது வெறுப்பை வெளிக்காட்டுகிறது. சொல்லப்போனால், அவர் எப்போதும் மகாராஷ்டிரா மற்றும் மராத்தி மக்களுக்குக் கடமைப்பட்டவராக இருக்க வேண்டும். கோத்ரா தொடர்புடைய வழக்குகளில் தற்போது பிரதமராக உள்ள மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராகக் காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை அப்போது எடுத்து வந்தது.
அப்போது, சரத் பவார் மற்றும் மோடி இடையே நடந்த பேச்சுவார்த்தை காரணமாக அந்த வழக்கில் இருந்து அமித் ஷாவுக்கு ஜாமீன் கிடைத்து. இதைப் பொதுவெளியில் அறிவிக்க வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.ஆனால் இதுதான் உண்மை. அதேபோல மற்றொரு வழக்கில், அமித் ஷாவுக்கு பால்தாக்கரே தான் உதவினார்.
இது குறித்து சஞ்சய் ராவத்திற்கு தெளிவாகவே தெரியும். சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே இதுகுறித்து பேசினால் அனைவரும் புரிந்துகொள்வார்கள்.
ஆனால், தற்போது அதே அமித் ஷா தனக்கு உதவியாக இருந்த சரத் பவார் மற்றும் தாக்கரேவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுரை மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.