நாட்டில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடிகளில் பெரிய கோடீஸ்வரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்கூட பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பெயரில் ரூ.1 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கிறது.
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக இயக்குநராக இருப்பவர் அதார் பூனாவாலா. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கம்பெனியின் இயக்குநர் சதீஷ் தேஷ்பாண்டேவுக்கு அதார் பூனாவாலா மொபைல் நம்பரிலிருந்து ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. அதில் சில வங்கிக் கணக்குகளை கொடுத்து அவசரமாக பணம் டிரான்ஸ்ஃபர் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
பூனாவாலாவிடமிருந்து மெசேஜ் வந்தததால் அந்த மெசேஜை கம்பெனியின் ஃபைனான்ஸ் மேலாளர் சாகர் என்பவருக்கு அனுப்பிவைத்து பூனாவாலா கேட்டுக்கொண்டபடி பணத்தை அனுப்பும்படி தேஷ்பாண்டே கேட்டுக்கொண்டார். சாகரும் சொன்ன பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் அதன் பிறகு விசாரித்த போதுதான் பூனாவாலா அது போன்று பணம் அனுப்பும்படி யாருக்கும் மெசேஜ் அனுப்பவில்லை என்று தெரியவந்தது.
இரண்டு நாள்களில் மொத்தம் 1.01 கோடி ரூபாயை கம்பெனி நிர்வாகம் மோசடி பேர்வழி தெரிவித்திருந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பியிருந்தது. இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஃபைனான்ஸ் மேலாளர் சாகர் போலீஸில் புகார் செய்துள்ளார். அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி புகாரை புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா உறுதிபடுத்தியிருக்கிறார். உலகத்திலேயே சீரம் இன்ஸ்டிடியூட் அதிக அளவில் தடுப்பூகளை தயாரித்து வருகிறது. சைபர் பிரிவு இந்தப் புகார் குறித்து விசாரித்து வருவதாக புனே பந்த் கார்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.