செந்தில் பாலாஜிக்கு செக்மேட்… ஸ்டாலினுக்கு தெரியலயா? புரியலயா? பாஜக பளீர்!

முதல்வர்

தலைமையிலான திமுக அரசின் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து 2019ல் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உறுதி செய்துள்ளது இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லையா?

புரியவில்லையா? தெரிந்திருந்தால், புரிந்திருந்தால் இந்நேரம் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியிருப்பாரே? எனப் பதிவிட்டுள்ளார். தனக்கு எதிரான கட்சியில் இருந்த போது, செந்தில் பாலாஜியின் ஊழல்கள் புட்டு புட்டு வைத்த மு.க.ஸ்டாலின், தன்னுடைய கட்சியில் சேர்ந்த உடன் எல்லாவற்றையும் மறந்து விட்டாரா? என்ற கேள்வியை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர்.

தமிழக அரசின் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. முன்னதாக அதிமுகவில் இருந்த போது ஜெயலலிதா தலைமையிலான அரசில் 2011-16 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ஓட்டுநர், நடத்துநர் பதவிக்கான ஆட்கள் நியமனத்தில் பணம் வாங்கி கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார், தற்போது பெரும் தலைவலியாக வந்து நிற்கிறது. ஆட்சி மாறினாலும் வழக்கு ஓயவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்தவர்கள் உடன் சமரசம் ஏற்பட்டதால் செந்தில் பாலாஜி, அவரது உதவியாளர் உள்ளிட்டோர் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் விஷயம் தலைகீழாக மாறியது. பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்கள் பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு வழக்கை முடித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டால், பணத்தை கொடுத்து வேலை பெற்றவர்கள் என்ற விஷயத்தில் அதை ஏற்றுக் கொண்டதாக கருதப்படும்.

வேலைக்காக லஞ்சம் பெறுவதும் குற்றம். கொடுப்பதும் குற்றம். எனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லாது. சமரசமாக செல்வது என்ற காரணத்தால் குற்ற வழக்குகளை விசாரிக்காமல் விட முடியாது. இந்த வழக்கை முதலில் இருந்து தமிழக அரசு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.