டெல்லியின் நொய்டாவைச் சேர்ந்தவர்கள் கணேஷ்-சுதா தம்பதியினர். இவர்களுக்கு நிக்கி, பல்லவி என இரண்டு மகள்கள். சுதாவின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட காரணத்தினால், அவர் தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். இதையொட்டி, மாப்பிள்ளைகளையும் பார்த்ததாகத் தெரிகிறது. ஆனால் நிக்கி, பல்லவி இருவருக்கும் திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், நொய்டா நகரின் செக்டார் 96 பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் 11-வது மாடிக்கு அதிகாலை நான்கு மணிக்குச் சென்ற சகோதரிகள் இருவரும், அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.
பின்னர் மகள்கள் இருவரையும் காணாமல் தாய் சுதா, அக்கம் பக்கத்தில் தேடியிருக்கிறார். அப்போது செக்டார் 96 பகுதியில் இருவரும் ரத்த காயங்களுடன் மயங்கி கிடப்பதாக சுதாவுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து அங்கு விரைந்த சுதா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகள்களை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், மூத்த மகள் உயிரிழந்துவிட்டதாகக் கூறி, சுதாவின் இளைய மகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனைக்கு விரைந்த போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தாய் சுதா திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதால்தான் சகோதரிகள் இருவரும் இந்த விபரீத முடிவெடுத்தது தெரியவந்திருக்கிறது.