டெல்லி போக்குவரத்து கழகம் 1,000 தாழ்தள பேருந்துகளை வாங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பும் திட்டத்திற்கு டெல்லி துணைநிலை ஆளுனர் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
டெண்டர் மற்றும் ஏலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த புகார் ஜூலை மாதம் துணைநிலை ஆளுனரால் பெறப்பட்டு, கருத்துக்காக தலைமைச் செயலாளர் நரேஷ்குமாருக்கு அனுப்பப்பட்டது. நரேஷ் குமார் தனது அறிக்கையை ஆகஸ்ட் மாதம் துணைநிலை ஆளுனரிடம் சமர்ப்பித்துள்ளார், மேலும் புகார் இப்போது மத்திய புலனாய்வுப் பணியகத்திற்கு (சி.பி.ஐ) அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: தேசிய கட்சியை தொடங்குவதாக அறிவித்த சந்திரசேகர் ராவ்; குமாரசாமி ஆதரவு
டெல்லி போக்குவரத்து கழகத்தின் டெண்டர் மற்றும் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான குழுவின் தலைவராக போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் நியமிக்கப்பட்டது “திட்டமிட்ட முறையில்” செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கான ஏல மேலாண்மை ஆலோசகராக DIMTS ஐ நியமித்தது “தவறுகளை எளிதாக்கும்” நோக்கத்துடன் செய்யப்பட்டது என்றும் புகார் குற்றம் சாட்டுகிறது.
குற்றச்சாட்டுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் 1,000 தாழ்தள BS-IV மற்றும் BS-VI பேருந்துகளுக்கான கொள்முதல் ஏலமும், அதைத் தொடர்ந்து 2020 மார்ச் மாதத்தில் தாழ்தள BS-VI பேருந்துகளுக்கான கொள்முதல் மற்றும் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தமும், விதிகளுக்கு முரணானது என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 19 அன்று துணைநிலை ஆளுனருக்கு தலைமைச் செயலாளர் சமர்ப்பித்த அறிக்கை, DIMTS மற்றும் டெல்லி போக்குவரத்து கழகத்தின் டெண்டர் குழு நிதி ஏலங்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்பது உட்பட சில “முறைகேடுகளை” சுட்டிக்காட்டியது.
சி.பி.ஐ ஏற்கனவே இந்த பேருந்துகளை வாங்குவதற்கான வருடாந்திர பராமரிக்கக்கூடிய ஒப்பந்தங்கள் குறித்து முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது, மேலும் இந்த புகாரை ஏற்கனவே விசாரிக்கப்பட்ட புகாருடன் இணைக்க துணைநிலை ஆளுனர் சக்சேனா ஒப்புதல் அளித்தார்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஓ.பி. அகர்வால் தலைமையிலான குழு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமர்ப்பித்த அறிக்கையில், “முழு ஒப்பந்தப்புள்ளி மற்றும் கொள்முதல் நடைமுறையிலும் நடைமுறைச் சீர்கேடுகளுக்கு” ஆம் ஆத்மி அரசு மீது குற்றம் சாட்டியதாக, வட்டாரங்கள் தெரிவித்தன.
“இந்த டெண்டர் நடைமுறையில் அரசு ஊழியர்களின் கிரிமினல் முறைகேடு விசாரணை நிறுவனத்தால் அதாவது சி.பி.ஐ.,யால் கண்டறியப்படும். இதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை சி.பி.ஐ.,க்கு அனுப்ப தலைமைச் செயலர் பரிந்துரை செய்தார், அதற்கு துணைநிலை ஆளுனர் ஒப்புதல் அளித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil