லண்டன்,
இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். ராணி எலிசபெத் தங்கி இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு சென்ற சார்லஸ் தனது தாயார் ராணி மறைவுக்கு பிறகு அரசராக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்லும் வழியில் தடுப்புச் சுவரை தாண்டி குதித்து மன்னர் மூன்றாம் சார்லசின் காரை நோக்கி ஓடிய நபர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பக்கிங்காம் அரண்மனைக்கு செல்லும் மன்னர் மூன்றாம் சார்லசை காண சாலையின் இரண்டு பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். அப்போது திடீரென ஒரு நபர் தடுப்புச் சுவரை தாண்டி குதித்து சாலையில் இறங்கினார்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் உடனடியாக அந்த நபரை தரையில் தள்ளி கட்டுப்படுத்தினர். தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை, போலீஸ் வேனை நோக்கி அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.