தாம்பத்திய உறவையொட்டி சில பெண்களுக்குப் பிறப்புறுப்பில் வலி, ரத்தப்போக்கு போன்ற சில பிரச்னைகள் ஏற்படலாம். நம் வாசகி ஒருவர், `தாம்பத்திய உறவுகொண்ட அடுத்த நாள் அடி வயிற்றில் மட்டும் வலி ஏற்படுகிறது. ஆனால், ரத்தப்போக்கு இல்லை. இது எதனால் ஏற்படுகிறது; ஏதும் பிரச்னையா’ என்று கேட்டு மெயில் செய்திருக்கிறார். மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி இதற்கான பதிலைச் சொல்கிறார்.
“உறவுக்குப் பிறகு அடுத்தநாள் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. ஆனால், ரத்தப்போக்கு ஏதுமில்லை என்றால், கருப்பையிலோ அல்லது சினைப்பையிலோ அல்லது பெண்ணுறுப்பின் உள்பகுதியிலோ ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கலாம். இதை மருத்துவத்தில் இடுப்பு அழற்சி நோய் (pelvic inflammatory disease) என்போம். பெண்களுக்கு சிறுநீர்ப்பாதையும், உறவுப்பாதையும் அருகருகே அமைந்திருப்பதால், சிறுநீரில் இருக்கிற கிருமிகள் சுலபமாகப் பெண்ணுறுப்புக்குள் சென்றுவிடும். இப்படிச் சென்றிருந்தால், தொற்று ஏற்பட்டு இடுப்பு அழற்சி நோய் ஏற்படும்.
இதேபோல, ஆசன வாயும் பெண்ணுறுப்பும் அருகருகில்தான் அமைந்திருக்கின்றன. ஆசன வாயில் கண்ணுக்குத் தெரியாத அளவு கழிவுகள் ஒட்டிக்கொண்டிருந்தாலும் அது பெண்ணுறுப்புக்குள் சென்றால் தொற்றை ஏற்படுத்திவிடும். இதுவும் இடுப்பு அழற்சி நோய்க்கான காரணம்தான். இப்படி நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், கழிவுகளை வெளியேற்றிய பிறகு, ஆசன வாயை மேலிருந்து கீழ் நோக்கி சுத்தம் செய்ய வேண்டும். கைகளை மேலும், கீழும் நகர்த்தி சுத்தம் செய்யக்கூடாது. இதை அம்மாக்கள் பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்.
இப்போது வாசகியின் பிரச்னைக்கு வருகிறேன். கணவன், மனைவி இருவரின் பிறப்புறுப்புகளும் சுத்தமாக இருக்க வேண்டும். உறவு கொள்வதற்கு முன்னால் கட்டாயமாக இருவரும் பிறப்புறுப்பைச் சுத்தம் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்படும். ஒருவர் பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவில்லை என்றாலும், இருவருக்குமே தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். உடனே மருத்துவரைச் சந்தித்து, என்ன தொற்று என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளைச் செய்து, சிகிச்சையை ஆரம்பியுங்கள்” என்றார் டாக்டர் நாராயண ரெட்டி.