திருப்பதி லட்டுவில் சர்க்கரையை குறைக்க வேண்டும் – சர்க்கரை நோயாளி பக்தர் வேண்டுகோள்

திருமலை: திருமலை அன்னமைய்யா பவனில் நேற்று காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார். இதில் 30 பக்தர்கள் நிறை, குறைகளை அதிகாரியிடம் தெரிவித்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும் போது, திருமலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு பிரசாதத்தை சாப்பிடும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு அதிகாரி தர்மா ரெட்டி பதிலளிக்கையில், சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக தயாரித்து வழங்க ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

திருப்பதியை சேர்ந்த பக்தர் ஒருவர் கூறும்போது, சுவாமியை பல மைல்கள் தூரத்திலிருந்து தரிசிக்க வரும் பக்தர்களை தேவஸ்தான அதிகாரிகளும், ஊழியர்களும், வாரி சேவா வினரும் கர்ப்பக்கிரகம் அருகே வரும் போது அவசர அவசரமாக தள்ளி விடுகின்றனர். அவர்களுக்கு பொறுமையே இருப்பதில்லை. இது குறித்து கேட்டால், “நீ யாரிடம் வேண்டுமாலும் புகார் செய்” என திமிராக பதிலளிக்கின்றனர். இது குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார்.பக்தர்களை தள்ளி விடக் கூடாதுஎன பலமுறை எச்சரித்துள்ளோம். ஆயினும் சிலர் அதுபோல் கடிந்துநடந்துகொள்வது வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து மீண்டும் அவர்களிடம் எச்சரிக்கை செய்யப்படும் என தர்மா கூறினார்.

ரூ. 140 கோடி காணிக்கை

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே அதிகபட்சமாக ஒரு மாத உண்டியல் காணிக்கை ரூ.140.34 கோடியாக பதிவாகி உள்ளது. மேலும், இந்த மாதத்தில் 1.05 கோடி லட்டு பிரசாதம் விற்பனையாகி உள்ளது. 22.22 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். 47.76 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 10.85 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.