சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த சிம்பு மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனையடுத்து அவர் பல படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் இயக்குநர் கௌதம் வாசுதேவுடன் மீண்டும் இணைந்துள்ளார். அப்படத்துக்கு வெந்து தணிந்தது காடு என்று பெயரிடப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை தழுவி எடுக்கப்படும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடந்தது. அதில் சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ராதிகா ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர். ட்ரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் வெளியாக இன்னும் 4 நாள்களே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. எப்போதும் ப்ரோமோஷன்களில் பெரிதாக தலை காட்டாத சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு ப்ரோமோஷனில் கலந்துகொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநாடு படம் வித்தியாசமான முயற்சியில் வந்து வெற்றிய பெற்றது. மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. அதுபோல் இன்னொரு மாறுபட்ட கதை அம்சத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் நான் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் தயாராகி உள்ளது.
சினிமாத்தனமாக இல்லாமல் யதார்த்தமான படமாக இருக்கும். இதில் 3 தோற்றங்களில் வருகிறேன். 19 வயது இளைஞனாகவும் என்னை உருமாற்றி நடித்துள்ளேன். ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்கள் படத்தில் உள்ளன. இது வெற்றி பெற்றால் 2-ம் பாகமும் வரும். ஒரு படத்தில் பல கதாநாயகர்கள் நடிப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் படத்துக்கு மேலும் வரவேற்பு கிடைக்கும். ரஜினி, அஜித்குமார், விஜய் என்று யாருடன் வேண்டுமானாலும் இணைந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.
Happy to get associated with @shibuthameens for Kerala Release https://t.co/K1Se4xa5gf
— Vels Film International (@VelsFilmIntl) September 9, 2022
எனது திருமணம் குறித்து யோசித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அது நடக்கிற நேரத்தில் நடக்கும். நிறைய 2-வது, மூன்றாவது திருமணங்கள் நடக்கின்றன. சிலர் காதலித்து விட்டு பிறகு பிரிகிறார்கள். விவாகரத்துகளும் நடக்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. எனவே இதுமாதிரி பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க நல்ல மணப்பெண் அமைய காத்து இருப்பதில் தவறு இல்லை. நல்ல மணப்பெண்ணுக்காக காத்து இருக்கிறேன். ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்.
முத்த காட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் போன்றவற்றை எனது படங்களில் திணிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். விரைவில் படம் டைரக்டு செய்வேன். இதற்காக 10 கதைகள் தயார் செய்து வைத்துள்ளேன்” என்றார்.