தொழில்நுட்பம் அதிரி புதிரியாய் வளர்ந்து நிற்கும் நிலையில், ஆச்சரியம் நிறைந்த மிகவும் பிரம்மாண்டமான கட்டிடங்களை உருவாக்குவது எல்லாம் சாதாரணமாகி விட்டது. அந்த வரிசையில் துபாயில் நிலவை போன்ற மிகவும் பெரிய சொகுசு விடுதி ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு மட்டும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டை சேர்ந்த மூன் ஓல்டு ரிசார்ட்ஸ் (Moon World Resort Inc.,) என்ற நிறுவனம் களமிறங்குகிறது.
735 அடி உயரத்திற்கு உலகமே வியக்கும் அளவிற்கு பார்ப்பதற்கு நிலவை போன்ற அச்சு அசலான கட்டடத்தை எழுப்பவுள்ளனர். இதற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 39 ஆயிரத்து 838 கோடி ரூபாய் ஆகும். இந்த விடுதியில் சொகுசு வசதிகள் முதல் சுற்றுலா தலங்கள் வரை பல்வேறு விஷயங்கள் இடம்பெறப் போவதாக தற்போதே சர்ப்ரைஸ் கொடுக்க தொடங்கி விட்டனர்.
எலிசபெத் மறைவு… வானில் தோன்றிய அதிசயம்- திகைத்து போன பிரிட்டன்!
உதாரணமாக துபாய் மால், அட்லாண்டிஸ் பால்ம் ஜுமெரியா ஆகியவை உள்ளே வரவுள்ளன. 10 ஏக்கரில் அமையவுள்ள நிலா வடிவமைப்பை கொண்ட விடுதியில் வெல்னஸ் சென்டர், நைட் கிளப், 300 ஸ்கை வில்லா குடியிருப்புகள், ஓட்டல் அறைகள் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன. இந்த விடுதியை சுற்றிலும் நிலவின் மேற்புறத்தை போலவே காட்சியளிக்கும் வகையில் உருவாக்க இருக்கின்றனர்.
இதற்காக மண்டல ரீதியிலான MENA லைசென்ஸிற்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். அது கிடைத்தவுடன் இடம் இறுதி செய்யப்பட்டு விடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் கட்டுமானத்தை 48 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால் ஆண்டுதோறும் ஒரு கோடி பேர் விருந்தினர்களாக வந்து செல்ல முடியுமாம். இதன்மூலம் 1.8 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்ட முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த விஷயம் மட்டும் சாத்தியமானால் துபாயின் பொருளாதாரம், உபசரிப்பு, பொழுதுபோக்கு, சுற்றுலா, கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், விண்வெளி சுற்றுலா உள்ளிட்டவற்றின் வளர்ச்சி அடுத்தகட்டத்திற்கு செல்லும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். துபாயில் நிலாவா? என்ற ஆச்சரியத்துடன் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் வருகை புரிவர்.
காதலால் சுழன்ற சாம்ராஜ்யம்… எலிசபெத் பிரிட்டன் ராணியான கதை…!
ஏற்கனவே உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா துபாயில் தான் உள்ளது. இந்த அதிசயத்துடன் நிலா விடுதி மற்றொரு அதிசயமாக சேர்ந்து கொள்ளும் என்கின்றனர் சுற்றுலா பயணிகள். மொத்தம் நான்கு பிரம்மாண்ட நிலா விடுதிகளை அமைக்க மூன் ஓல்டு ரிசார்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது துபாய் உடன் வட அமெரிக்கா, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றிலும் நிலா விடுதியை கட்ட முடிவு செய்திருக்கின்றனர்.