அதிமுக அரியணையை கைப்பற்றுவது யார் என்ற சண்டையில்
,
ஆகியோர் தனித்தனி குழுவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம், அதில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நீக்கம், அதிமுக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் என பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனாலும், இரு அணியினரும் தங்களத்து கரத்தை வலுப்படுத்த நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். தெற்கில் ஓபிஎஸ், வடக்கு, மேற்கில் இபிஎஸ் என மாறி மாறி விழாக்களில் பங்கேற்று அதிமுக நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வரான ஒ.பன்னீர்செல்வம் நாங்கள் தான் உண்மையான அதிமுக, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான் என்று கூறி வருவதோடு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே அதிமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கூறி வருகிறார் அதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வருவதாக தெரிகிறது.
அதன் ஒருபகுதியாக நேற்று முன்தினம் ஒரத்தநாடு பகுதியில் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வத்தின் வலதுகரமாக உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்து பேசியதோடு, பிறந்தநாள் வாழ்த்தையையும் பெற்றார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி திருப்பரங்குன்றம் மற்றும் மேலூர் தொகுதிகளின் 10 பிரச்சினைகள் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் எம்.எல்.ஏக்கள் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் பெரியபுள்ளான் ஆகியோர் சனிக்கிழமை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா பேசியதாவது:
“சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சூழலில் உள்ளனர். மகளிர் இலவச பேருந்துகளில் ஏறுவதற்கு பெண்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். பயனற்ற பேருந்துகள் மட்டுமே இலவச பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் இனி எந்தவொரு தவறான வழிக்கும் செல்ல மாட்டார் என நினைக்கிறேன். ஓ.பி.எஸ் உடன் இருப்பவர்கள் அவரை தவறான வழிக்கு அழைத்து செல்கிறார்கள். ஓ.பி.எஸ் திமுகவுடன் தொடர்பு இல்லை என நிரூபித்தால் அதிமுகவில் சேர்க்க நினைக்கலாம், ஆனால், தற்போது அது நடைபெற வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் சசிகலா, டி.டி.வி தினகரன் இருவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும்” இவ்வாறு கூறினார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
சசிகலா, டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில், வி.வி.ராஜன் செல்லப்பாவின் இந்த கருத்து தென் மாவட்டங்களில் இருந்து சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாடே உள்ளது என்ற கூற்றை மெருகேற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.