தேசிய கட்சியை தொடங்குவதாக அறிவித்த சந்திரசேகர் ராவ்; குமாரசாமி ஆதரவு

Sreenivas Janyala

தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தனது தேசிய கட்சியை தொடங்குவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார், மேலும், “மாற்று தேசிய நிகழ்ச்சி நிரலில்” ஒருமித்த கருத்து உள்ளது என்றும் அவர் கூறினார்.

கே.சி.ஆர் என்று அழைக்கப்படும் கே. சந்திரசேகர் ராவ் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எச்.டி.குமாரசாமி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “தெலுங்கானா இயக்கம் தொடங்குவதற்கு முன்பு நாங்கள் செய்ததைப் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களுடன் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு”, தேசியக் கட்சி தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் கே.சி.ஆர் கூறியதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: ராகுல் காந்தி, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சந்திப்பு.. இந்து விரோதம் என பாஜக குற்றச்சாட்டு

கே.சி.ஆர் மேலும் கூறுகையில், “விரைவில், தேசிய கட்சியை உருவாக்குவதும், அதன் கொள்கைகள் வகுக்கப்படுவதும் நடைபெறும்” என்றார்.

கடந்த சில மாதங்களாக, எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க கே.சி.ஆர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வந்தார். மே மாதம் டெல்லி, சண்டிகர், பெங்களூரு ஆகிய இடங்களுக்குச் சென்ற அவர், கடந்த மாதம் பீகார் சென்றார். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை குமாரசாமியுடன் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசினார். ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் (டி.ஆர்.எஸ்) தலைமையகமான தெலுங்கானா பவனில், தேசியக் கட்சியின் அறிவிப்பு குறித்து காலை முதலே பரபரப்பு நிலவியது.

பா.ஜ.க.,வுக்கு எதிரான அணியை உருவாக்கவும், கூட்டணியில் முக்கியப் பங்கு வகிக்கவும் குமாரசாமியின் ஆதரவைப் பெற்றார் கே.சி.ஆர். அத்தகைய கூட்டணியில் இருந்து காங்கிரஸை நிராகரித்த முதல்வர் கே.சி.ஆர், பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பா.ஜ.க.,வுக்கு போதுமான வலுவான மாற்று அல்ல என்றும் மக்கள் அதன் தலைமையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் கூறினார். ஒத்த எண்ணம் கொண்ட பிராந்தியக் கட்சிகளை ஒன்றிணைக்க நினைக்கும் கே.சி.ஆர், “பிளவுபடுத்தும் ஆட்சியின் காரணமாக மக்களிடையே பிளவை உருவாக்கும் சதிகளை” முறியடிக்க வேண்டும் என்று பேசினார்.

குமாரசாமி தனது கட்சி டி.ஆர்.எஸ்ஸுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்ததுடன், தேசிய கட்சி தொடங்குவது குறித்த கே.சி.ஆரின் அறிவிப்பை வரவேற்றார்.

கே.சி.ஆர் மற்றும் பிற எதிர்கட்சி தலைவர்கள்

மே மாதம் பெங்களூருவில் அவர்கள் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து, குமாரசாமியை ஹைதராபாத் வரவழைத்தார் கே.சி.ஆர். சனிக்கிழமை இரவு ஹைதராபாத் வந்த குமாரசாமி, ஞாயிற்றுக்கிழமை மதியம் கே.சி.ஆர் உடன் அவரது அலுவலக இல்லமான பிரகதி பவனில் மதிய உணவு சாப்பிட்டார். அதன் பிறகு, இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தாக உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களின் முந்தைய சந்திப்பில், குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவேகவுடாவும் கலந்து கொண்டார், மேலும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.,வுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, குமாரசாமி, தெலுங்கானாவின் வளர்ச்சி, பிராந்திய கட்சிகளின் பங்கு மற்றும் தேசிய அரசியலில் இந்த நேரத்தில் கே.சி.ஆர் வகிக்கக்கூடிய பங்கு குறித்து கே.சி.ஆரிடம் பேசியதாகவும் உள் வட்டாரங்கள் தெரிவித்தனர்.

பீகாரில், கே.சி.ஆர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரை சந்தித்தபோது, ​​அவர் “பா.ஜ.க-முக்த் பாரத்” க்கு அழைப்பு விடுத்தார். பிராந்திய தலைவர்களுடனான சில கலந்துரையாடல்கள் காங்கிரஸை எந்தவொரு கூட்டாட்சி கூட்டணியிலிருந்தும் ஒதுக்கி வைப்பதில் கவனம் செலுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஆர்.எஸ் நிர்வாகிகளின் கூற்றுப்படி, சில பிராந்திய தலைவர்கள் இந்த திட்டத்தில் கே.சி.ஆருடன் இணைந்து உள்ளனர், ஆனால் சிலரின் நிலைப்பாடு உறுதியாக தெரியவில்லை.

தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர், ஒத்த எண்ணம் கொண்ட பிராந்தியக் கட்சிகளின் ஆதரவைத் தேடுவதைத் தவிர, இடதுசாரிக் கட்சிகள், சிவில் சமூகம் மற்றும் அறிவுஜீவிகளின் ஆதரவையும் கோருகிறார். கடந்த வாரம், சி.பி.ஐ(எம்) கட்சியின் மாநில செயலாளர் தம்மினேனி வீரபத்ரம், முன்னாள் எம்.எல்.ஏ ஜூலகாந்தி ரங்காரெட்டி மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் செருபள்ளி சீதாராமுலு ஆகியோரை கே.சி.ஆர் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது.

அதன்பிறகு, தெலுங்கானாவிலோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளிலோ மத வெறுப்பை உருவாக்கும் எந்த முயற்சியையும் முறியடிக்க ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.சி.ஆர் அழைப்பு விடுத்தார். மத ரீதியாக ஒருமுகப்படுத்தும் அரசியலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுஜீவிகளை கேட்டுக் கொண்ட கே.சி.ஆர், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைக்க தனது அழைப்புக்கு ஆதரவளித்த சி.பி.ஐ(எம்) க்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.