ஜெனீவா: கரோனாவால் உலகில் 44 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று உலக அளவில் குறைந்து வருவதாகக் கருதப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ், “கரோனா தொற்றும் உயிரிழப்புகளும் உலக அளவில் குறைந்து வருவது உண்மைதான். இது ஊக்கமளிக்கும் ஒரு விஷயம் எனற போதிலும், இதே நிலை தொடரும் என்பதற்கோ மீண்டும் தொற்று அதிகரிக்காது என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கரோனா வாராந்திர உயிரிழப்புகளின் எண்ணிக்கை 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. எனினும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னமும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே உள்ளது. கடந்த வார அறிக்கையின்படி ஒவ்வொரு 44 வினாடிகளுக்கும் உலகில் ஒருவர் கரோனாவால் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தவிர்க்கக்கூடியவையே. கரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த வைரஸ் எளிதில் மறைந்துவிடாது.
கரோனா தொற்று தொடர்பாக 6 கொள்கை அறிவிப்புகளை உலக சுகாதார நிறுவனம் அடுத்த வாரம் வெளியிட இருக்கிறது, உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில் அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதில் விரிவாக விளக்கப்படும். பொதுவாக தொற்று அதிகரிக்கவே செய்யும் என்பதால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொரு நாடும் எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.