தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக உயர்ந்து தற்போது குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். பொதுவாக தன்னை திராவிட சித்தாந்தவாதியாக காட்டிக்கொள்ளும் சத்யராஜ் சமூக பிரச்னைகளுக்கு தவறாமல் குரல் கொடுப்பவர். மேலும் தன்னுடைய பகுத்தறிவு பேச்சாலும் பிரபலமடைந்தவர். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறான பெரியார் படத்திலும் நடித்து தன்னை தீவிர பெரியாரியவாதியாக பிரகடன்பப்படுத்திக்கொண்டவர். இந்தச் சூழலில், மனதின் மையம் அறக்கட்டளையின் ஒரு அங்கமான நேசம் சேவை மையம் தொடக்க விழா ஈரோட்டில் நேற்று நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட சத்யராஜ் பேசுகையில், “தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை, உறவில் சிக்கல், மூட நம்பிக்கைகள், சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம், பெண் அடிமைத்தனம், பண்பாடு, கலாசாரம், நாகரீகம், பொருளாதார சிக்கல், மனநலம் பாதித்த சமூகம் தரும் மன அழுத்தம் ஆகும்.
நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவன் நான். முதல் தலைமுறை பட்டதாரிகளை நீட்தேர்வு பாதிக்கும் என்பதால் அது அவசியம் இல்லை. டாக்டர், வக்கீல்கள் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிக்க தெரியாத பெற்றோரின் குழந்தைகள் அவர்கள் படித்து முன்னுக்கு கொண்டுவருவது ரொம்ப முக்கியம்.
மனநலம் மேம்படுத்தினால் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகி விடும். உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு டாக்டர்களிடம் செல்கிறோம். ஆனால், மனநலம் குன்றினால் மட்டும் டாக்டர்களிடம் செல்வதில்லை. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், எம்.ஜி.ஆரின் பாடல்களை கேட்பேன்.
அதன் மூலம் நிறைய தெளிவு கிடைக்கும். நடிகர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், நடிகர்களுக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. நடிகர்கள் ஒன்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களோ, அறிஞர்களோ அல்ல. எங்களுக்கு சாப்பாடு போடுங்கள் ஆனால் எங்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடாதீர்கள். அது தேவையில்லை” என்றார்.