சென்னை : நடிகர் கார்த்தி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கைதி, விருமன் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
தொடர்ந்து இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் வெளியாகவுள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் பொது வெளியிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
முன்னணி நாயகன் கார்த்தி
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக உள்ளார். இவரது அண்ணன் சூர்யா ஒரு பக்கம் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் கலக்கிக் கொண்டிருக்க, கார்த்தி ஒரு புறம் சிறந்த நாயகனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். எந்த கேரக்டரை கொடுத்தாலும் அதை சிறப்பாக்கும் வித்தை இவர்கள் இருவருக்கும் கைவந்த கலையாக உள்ளது.
சிறப்பான கேரக்டர்கள்
குறிப்பாக கார்த்தி தன்னுடைய கேரியரில் நான் மகான் அல்ல போன்ற சாக்லெட் பாய் கேரக்டர்களிலும் கைதி போன்ற முதிர்ச்சியான கேரக்டர்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கொம்பன் படத்திற்கு பிறகு முத்தையா இயக்கத்தில் இவர் நடித்து வெளியான விருமன் படம் சிறப்பான வசூலை எட்டியுள்ளது.
விருமன் படம்
கிராமத்து கதைக்களத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மிகவும் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளன. இந்தப் படத்தில் ஷங்கர் மகள் அதீதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கார்த்தியின் வந்தியத்தேவன் கேரக்டர்
இந்நிலையில் கார்த்தியின் நடிப்பில் வரும் செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் வந்தியத் தேவன் என்ற கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளார். முன்னதாக இந்தக் கேரக்டரில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் நடிக்கவிருந்த நிலையில் தற்போது கார்த்தி இந்தக் கேரக்டரில் நடித்துள்ளது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் சர்தார் படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் பொது வெளியிலும்கூட இவரை ஆக்டிவாக காண முடிகிறது.
நடிப்பு வேறு.. வாழ்க்கை வேறு
இதனிடையே அகரம் பவுண்டேஷனுக்கான விழா ஒன்றில் பேசியுள்ள கார்த்தி, நடிப்பு வேறு வாழ்க்கை வேறு என்று கூறியுள்ளார். இன்றைக்கு பள்ளிகளில்கூட போதைப் பழக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ளார். இதை நிறுத்த அரசும் பெற்றோர்களும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
போதைக் கலாச்சாரம்
சமீப காலங்களில் போதை மற்றும் துப்பாக்கிக் கலாச்சாரத்தை மையமாக வைத்து தமிழில் அதிகமான படங்கள் வெளியாகி வருகின்றன. கார்த்தி மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான கைதி மற்றும் விக்ரம் படங்களில்கூட இதை மையமாக வைத்தே கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
போதை பழக்கம் குறித்து கார்த்தி
கைதி படத்திலும் போதை மருந்துகளை மையமாக வைத்து கதைக்களம் இருந்த நிலையில், சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் அவர் போதை மருந்து கடத்தல் தலைவனாகவே நடித்திருந்தார். இந்நிலையில் போதைப் பழக்கம் குறித்து தற்போது கார்த்தி பேசியுள்ளார்.