நவீன தமிழ்க் கவிதைகளின் தந்தையாக போற்றப்படும் மகாகவி் பாரதி, பெண் விடுதலைக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே குரல் கொடுத்தவர். அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பாரதி என்ற பெயர் வந்த கதை:
பார் போற்றும் கவிஞன் சுப்பிரமணிய பாரதியார், ஐந்து வயதிலேயே தாயை இழந்தவர். தாய்ப்பாசமின்றி வளர்ந்த போதிலும் ஏழு வயது முதலே கவிதையால் கர்ஜிக்க தொடங்கிவிட்டார். 11 வயதில் இவரது கவி பாடும் ஆற்றலைக் கண்டு வியந்த எட்டயபுர மன்னர் தான் பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் அவரது பெயர் சுப்பிரமணிய பாரதி என்றானது.
பாலப்பருவத்திலேயே வியக்க வைத்த பாரதியின் தமிழ்ப்புலமை:
திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பின் போதே தமிழ் அறிஞர்களுடனும், பண்டிதர்களுடனும் சொற்போர் புரியத் தொடங்கினார். அதனால் பாரதியின் தமிழ் புலமை மென்மேலும் வளர்ந்ததைக் கண்டு திருநெல்வேலி சீமை மக்கள் வியந்தார்கள்.
குழந்தை திருமணங்களுக்கு எதிராக கவி பாடிய பாரதி:
பாரதியாருக்கு 14 வயதாகும் போதே அவருக்கும் 7 வயது சிறுமியான செல்லம்மாளுக்கும் திருமணம் நடந்தேறியது. இதுபோன்று இனி நடக்கவே கூடாது என எண்ணிய பாரதி, பிற்காலத்தில் தனது கவிதைகள் மூலம் பால்ய விவாகத்துக்கு எதிராக பொங்கி எழுந்து கவிதைகளை வடித்தார்.
தமிழ் தவிர்த்த பிற மொழிகளிலும் புலமை பெற்ற பாரதி:
16 வயதில் தந்தையையும் இழந்து வறுமையில் வாடிய பாரதி, இடர்பாடுகளையும் தாண்டி அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலம், பெங்காலி மொழிகளிலும் புலமை பெற்றவராகத் திகழ்ந்தார். அத்துனை மொழிகளில் ஆற்றல் பெற்றதால் தான்,
‘யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று தெளிவாகப் பாடினார்.
திரைப்படங்களையும் ஆக்கிரமித்த பாரதியின் கவிதைகள்:
பாரதியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது படங்களில் அவரது கவிதைகளை மிகவும் நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்டனர். நாட்டுப்பற்று, விடுதலை வேட்கை, சமூக எழுச்சி என பல சூழல்களுக்கு பாரதியாரின் கவிதைகள் பயன்படுத்தப்பட்டன. நாம் இருவர், வேதாள உலகம், கப்பலோட்டிய தமிழன் போன்ற படப்பாடல்கள் இன்று கேட்டாலும் மெய்சிலிர்க்கும். கைகொடுத்த தெய்வம், படிக்காத மேதை, ஓர் இரவு, வாழ்க்கை, பாரதி போன்ற படங்களிலும் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகள் பாடல்களாக மக்களின் மனதை கொள்ளை கொண்டன.
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே !
சொல்லடி சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
ஏழாவது மனிதன் படத்தில் எல்.வைத்தியநாதன் இசையில் கேஜே ஏசுதாஸின் குரலில் இடம்பெற்ற காக்கைச் சிறகினிலே நந்தலாலா பாடல் இன்று கேட்டாலும் செவிகளில் தேன் பாயும். திரைப்படங்களைப் பொறுத்தவரை இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் பாரதியின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆர். சுதர்சனம், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன், எம்எஸ் விஸ்வநாதன், கேவி மகாதேவன், இளையராஜா, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் பாரதியின் கவிதைகளுக்கு இசை வடித்துள்ளனர்.
பாரதி திரைப்படப் பாடல்களாக நினைத்து தனது கவிதைகளை வடிக்கவில்லை. அவை யாப்பு இலக்கணத்துடன் பொருந்திய கவிதைகளாகும். திரை இசை அமைப்பாளர்கள் விரும்பும் தாளம், சந்தங்களுடன் இருந்ததால் படங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தியதால் இயக்குனர்கள் அதனை நாடினர்.
“கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி” – பாரதி.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM