நானே பாத்துக்குறேன்… பாஜகவ என்கிட்ட விட்ருங்க; கே.சி.ஆர் எடுத்த சபதம்- இது நேஷனல் பாலிடிக்ஸ்!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது. இதனை முறியடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. ஆனால் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் புதிதாக ஒரு திட்டத்தை களமிறங்க திட்டமிட்டுள்ளார். முன்னதாக பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட 2018 முதல் முயற்சித்து கொண்டிருக்கிறார்.

2019ல் பாஜகவின் வெற்றியை பார்த்ததும் தனது திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய எண்ணம் மீண்டும் முளைத்த நிலையில், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் பாஜக மற்றும் பிரதமர் மோடியை தாக்கிப் பேசுவதை தவறாமல் செய்து வருகிறார். சமீபத்தில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் பிரதமர் ஹெச்.டி தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தசரா பண்டிகை அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார். அதாவது தேசிய அளவிலான புதிய அரசியல் கட்சியை தொடங்கி, அதற்கு ”பாரத் ராஷ்டிர சமிதி” (BRS) என்று பெயரிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது எந்தளவிற்கு வெற்றி வாய்ப்பை பெற்று தரும் என்பது தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் தெலங்கானா மாநிலத்தை தாண்டி வேறெந்த மாநிலத்திலும் கே.சந்திரசேகர் ராவ் கட்சிக்கு எம்.எல்.ஏக்களோ, எம்.பிக்களோ இல்லை. அடுத்த தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில், அதற்கான வியூகத்தை எப்படி அமைப்பார்? எப்படி செயல்படுத்தப் போகிறார்? உள்ளிட்ட கேள்விகளை அரசியல் பார்வையாளர்கள் எழுப்புகின்றனர்.

மற்ற மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் அல்லது பாஜக வலுவான நிலையில் இருக்கிறது. இதனால் கே.சந்திரசேகர் ராவ் கனவு பலிக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று விவசாயிகள், அரசியல் வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள், ஓய்வு பெற்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கே.சந்திரசேகர் ராவை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெலங்கானா ராஷ்டிர சமிதியின் மூத்த தலைவர் பல்ல ராஜேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதன் நீட்சி தான் தேசிய அளவிலான புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் அளவிற்கு கே.சந்திர சேகர் ராவை கொண்டு சென்றிருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படியெனில் மாநில கட்சி என்னவாகும் எனக் கேள்வி எழுகிறது. இதுபற்றி அக்கட்சியினர் கூறுகையில், அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை மாநில அரசியலில் தான் கவனம் செலுத்துவார். அதன்பிறகு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தேசிய அரசியலுக்கு சென்று விடுவார் என்கின்றனர். அடுத்த இரண்டு வாரங்களில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

அதில் புதிய அரசியல் கட்சியுடன் தெலங்கானா ராஷ்டிர சமிதியை இணைக்கவும் அல்லது மாநில கட்சியை தேசிய கட்சியாக மாற்றவும் கே.சந்திரசேகர் ராவிற்கு முழு அதிகாரம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் ஆதரவை திரட்ட ”தெலங்கானா மாடலை” முன்னுதாரணமாக காட்டப் போவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அது போதாது என்றும், நாட்டை புதிய பாதையில் அழைத்து செல்லும் வகையில் புதுமையான திட்டங்கள், நிர்வாகச் செயல்பாடுகள் வேண்டும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.