லே: பப்புவா நியூ கினியா நகரில் 7.6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியாவின் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகராக அறியப்படும் லே நகரம் உள்ளது. இந்நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நடுக்கம் 61.4கிமீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. இன்று காலை உள்ளூர் நேரப்படி 9.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
விளவுகள்
இந்த நிலநடுக்கத்தை நகரின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் பல்வேறு தரப்பினரும் உணர்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் சேதம் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சுனாமி எச்சரிக்கை?
இந்த கடுமையான நிலநடுக்கத்தால் முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோல் பப்புவா நியூ கினியாவின் பல்வேறு பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வேறுபட வாய்ப்பு?
இது ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஆனால் இதேபோல் வெவ்வேறு புவி அறிவியல் ஆய்வு மையங்களால் கொடுக்கப்பட்ட அறிக்கையில், ரிக்டர் அளவுக் கோலில் 7.4 ஆகவும், 7.2ஆகவும் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இதனால் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்டுள்ள சேத விவரம் குறித்தும் அறியப்படாமல் உள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தொடரும் நிலநடுக்கம்
சில லட்சம் மக்கள் வாழ்ந்து வரும் பப்புவா நியூ கினியா தீவு நாடு, நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள பகுதியில் உள்ளது. இதனால் ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.