7.7 ரிக்டர் அளவில் பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்ஏற்ப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.7 ஆக பதிவானது.
பப்புவா நியூ கினியா ஒரு தீவு நாடாகும். இது ஆஸ்திரேலியாவிற்கு அருகே அமைந்துள்ளது. அப்பகுதிகளில், செயலில் உள்ள எரிமலைகள் அதிகமிருக்கும். அதுமட்டுமின்றி அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும் வழக்கம். இந்நிலையில், பப்புவா நியூ கினியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது பப்புவா நியூ கினியாவில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள், மற்றும் உயிர்சேதங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நேற்று முன் தினம் சீனாவிலும், நேற்று இந்தோனேசியாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது.
கோரோகா நகரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், நிலநடுக்கத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும், காணொலிகளும் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில், நிலநடுக்கத்தின் போது சுவர்களில் பெரிய விரிசல்கள் ஏற்படுவதும், ஜன்னல்கள் உடைவதும் தெரிகிறது.
இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கங்களை விட இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் தீவிரமானதாக இருந்ததாக நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு மிக அருகில் உள்ள லே மற்றும் மடாங்க் நகரத்தில் வாழும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலநடுக்கம் பப்புவா நியூ கினியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.