சென்னை: “தேசியம் என்ற வார்த்தை வந்ததால் தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம் எனக்கூறுவது சரி கிடையாது” என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்: ” ராமானுஜர் காலத்தில் இருந்தே சமூக நீதி பேசப்பட்டு வருகிறது. என்னைப் பொருத்தமட்டில், ஒரு ராமசாமிக்கு மட்டும் அதற்கான முழுப்பெருமையும் கிடையாது. பல ராமசாமிகள் சமூக நீதிக்காக போராடி இருக்கிறார்கள்.
ஒரு 30-35 ஆண்டுகளுக்குப் பின்னர், தேசிய கல்விக் கொள்கை என்று ஒரு இரண்டு லட்சம், மூன்று லட்சம் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, பல லட்சம் மக்களிடம் கருத்துக்கேட்டு, சும்மா ஒன்றும் கொண்டுவரவில்லை.
எனவே அதனை உண்மையாக தெரிந்துகொண்டு, அந்த புதிய கல்விக் கொள்கையை நாம் முன்னெடுத்துச் சென்றால் என்ன? தேசியம் என்ற வார்த்தை வந்ததால் தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டோம் எனக்கூறுவது சரி கிடையாது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கிடைக்கின்ற கல்வி அரசுப் பள்ளிகளில் முழுமையாக கிடைக்கிறதா? அனைத்து அரசியல்வாதிகளின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கின்றனரா? ” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.