தெலுங்குத் திரையுலகின் பழம்பெரும் நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பிரபாஸின் உறவினருமான கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குவைறால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
கடந்த 1940-ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம், மொகல்தூரில் (தற்போது ஆந்திரப்பிரதேசம்) பிறந்த கிருஷ்ணம் ராஜூ, ‘Chilaka Gorinka’ என்ற திரைப்படத்தின் மூலம் 1966-ம் ஆண்டு திரையுலகில் நுழைந்தவர். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகனாகவும், பின்னர் வில்லனாகவும் வலம் வந்தவர். இந்தி திரைப்படங்கள் உள்பட சுமார் 190-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘ரெபல் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்ட இவர், நந்தி விருது, ஃபிலிம்பேர் உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரின் சகோதரர் சூர்ய நாரயண ராஜூவின் மகன் தான், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ். இவரின் ‘ராதே ஷ்யாம்’ படத்திலும் கடைசியாக கிருஷ்ணம் ராஜூ நடித்திருந்தார். நடிப்பைத் தாண்டி அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர் கிருஷ்ணம் ராஜூ. பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த இவர், காக்கிநாடா மற்றும் நாரசாபுரம் மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்று இருமுறை எம்பியாகவும் இருந்துள்ளார். மேலும் கடந்த 1999-ம் ஆண்டு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், வயது மூப்பு மற்றும் கொரோனா பாதிப்புக்கு பிந்தைய உடல்நலப் பாதிப்புகளால் அவதிப்பட்ட வந்த கிருஷ்ணம் ராஜூ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடி ஆகியோர் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். நாளை அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
Saddened by the passing away of Shri UV Krishnam Raju Garu. The coming generations will remember his cinematic brilliance and creativity. He was also at the forefront of community service and made a mark as a political leader. Condolences to his family and admirers. Om Shanti pic.twitter.com/hJyeGVpYA5
— Narendra Modi (@narendramodi) September 11, 2022