நாகர்கோவில்: ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் 4 நாட்கள் தமிழகப் பயணம் நேற்றுடன் நிறைவடைந்தது. அவர் நேற்று புலியூர் குறிச்சி தேவசகாயம் ஆலயத்தில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் பாதிரியார்களை சந்தித்துப் பேசினார். இன்று (செப். 11) முதல் கேரள மாநிலத்தில் ராகுல் நடைபயணம் மேற்கொள்கிறார்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், கட்சியினரிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையிலும் `பாரத் ஜோடோ யாத்ரா` எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே ராகுல் காந்தி தொடங்கினார்.
மொத்தம் 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள், இரு யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவு பயணித்து காஷ்மீரில் நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அவருடன் காஷ்மீர் வரை 118 பேர் செல்கின்றனர்.
பாதிரியார்களை சந்தித்த ராகுல்: நாகர்கோவிலில் நேற்று முன்தினம் 3-வது நாள் நடைபயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, வழியில் புலியூர்குறிச்சி தேவசகாயம் ஆலயத்தில் மதியம் ஓய்வெடுத்தார். அப்போது, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் பாதிரியார்களை அவர் சந்தித்தார். நடைபயணம் வெற்றிபெற வேண்டி பாதிரியார்கள் ஜெபம் செய்து, ராகுலை வாழ்த்தினர். மேலும், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர்களுடன் ராகுல் காந்தி அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தார்.
இந்து மதம், பாரத மாதா மற்றும் தமிழகத்தில் திமுகவின் வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த ஆண்டு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது நாள் இரவு அழகியமண்டபத்தில் நடைபயணத்தை ராகுல் நிறைவு செய்தார். பின்னர், அங்கிருந்து காரில் முளகுமூடு புனித மேரி ஐசிஎஸ்இ பள்ளிக்குச் சென்று, அங்கு இரவு தங்கினார். 4-வது நாள் நடைபயணத்தை முளகுமூட்டில் நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியை பகல் 9.10 மணிக்கு அடைந்தார்.
செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் நின்றிருந்த மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள், மகளிர் குழுவினர் என பலதரப்பட்டோரும் ராகுல்காந்தியுடன் நடந்து சென்றவாறே, அவருடன் பேசி மகிழ்ந்தனர்.
ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங், சட்டப்பேரவை உறுப்பினர்கள் விஜய் வசந்த், ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சென்றனர்.
பெரியார் மண்ணை பிரிவது வருத்தம்: மார்த்தாண்டத்தில் ஓய்வெடுத்த ராகுல் காந்தி, மீண்டும் மாலையில் குழித்துறை வழியாக கேரள எல்லையான தலைச்சன்விளையில் நடைபயணத்தை நிறைவு செய்தார். அங்கு ராகுல்காந்தி திறந்த வேனில் நின்றபடி பேசும்போது, “தமிழகத்தில் பெரியார் மண்ணை விட்டுப் பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளது. அதேசமயம், இனி நாராயண குரு பிறந்த கேரளத்துக்குள் செல்லவிருப்பதை எண்ணி மகிழ்கிறேன். தமிழகத்தில் 4 நாட்கள் நடைபயணம் வெற்றிகரமாக அமைந்தது” என்றார்.
அத்துடன் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் 4 நாள் நடைபயணம் நிறைவடைந்தது. இன்று முதல் 19 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் 7 மாவட்டங்கள் வழியாக அவர் நடைபயணம் மேற்கொள்கிறார்.
தமிழக எல்லையை ஒட்டியுள்ள பாறசாலையில் கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சுதாகரன், கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட கேரள மாநில காங்கிரஸார் நேற்றே திரண்டனர். இன்று பாறசாலையில் பிரம்மாண்ட வரவேற்புக்கு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
பாறசாலை-திருவனந்தபுரம்-திருச்சூர் வரை தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், திருச்சூரில் இருந்து நிலாம்பூர் வரை மாநில நெடுஞ்சாலைகள் வழியாகவும் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.
7 மாவட்டங்கள் வழியாக…
இன்று முதல் 14-ம் தேதி வரை திருவனந்தபுரம் மாவட்டத்திலும், 14-ம் தேதி மதியம் முதல் 17-ம் தேதி வரை கொல்லம் மாவட்டம், 17 முதல் 20 வரை ஆலப்புழா மாவட்டம், 21, 22-ம் தேதிகளில் எர்ணாகுளம் மாவட்டம், 23 முதல் 25-ம் தேதி வரை திருச்சூர் மாவட்டம், 26, 27-ம் தேதிகளில் பாலக்காடு மாவட்டம், 28, 29-ம் தேதிகளில் மலப்புரம் மாவட்டத்திலும் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். பின்னர், தமிழகத்தின் கூடலூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செப். 30-ம் தேதி செல்கிறார்.