பாட்னா: பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மதுவிலக்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் அதிகளவில் மதுபாட்டிகள் பிடிபடுகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் ஜேசிபி இயந்திரத்தால் உடைக்கப்படுகின்றன. இதனால் பெரும் கண்ணாடி கழிவுகள் ஏற்படுகின்றது. இவற்றை அகற்றுவதில் சிக்கல்கள் எழுகின்றன. இந்நிலையில் பறிமுதல் செய்யும் மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஜீவிகா திட்டம் என்ற புதிய திட்டத்தை பீகார் அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கண்ணாடி வளையல்கள் தயாரிக்க கிராமப்புற பெண்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகின்றது. அவர்களுக்கு மூலப்பொருளாக உடைத்து நொறுக்கப்பட்ட மதுபாட்டில்கள் வழங்கப்படும். மாநில அரசின் மதுவிலக்கு துறையானது கண்ணாடி வளையல் உற்பத்தி மையத்தை உருவாக்குவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.