மதுரையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவர் தன் தாய் தந்தைக்கு தனது வீட்டிலேயே கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.
இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெற்றோரை அவமதித்தும் முதியோர் இல்லங்களில் கொண்டு போய்விடும் அவல நிலையும் இருந்து வரக்கூடிய வேளையில், காவல்துறையில் இருப்பவர்களுக்கு குடும்ப பாசமெல்லாம் இருக்காது என்ற பொதுவான பார்வைக்கிடையில், காக்கிச்சட்டைக்குள்ளும் பாசம் இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக மறைந்த தனது பெற்றோர்களின் நினைவாக துணைவியாரின் ஆதரவுடன் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவர் வீட்டிலேயே கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.
மதுரை மாநகர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ரமேஷ்பாபு என்பவர், தான் வசிக்கும் சிந்தாமணி பகுதியில் உள்ள தனது வீட்டில் அவரது தாய் தந்தையை போற்றி வணங்கும் வகையில் சிறிய கோவிலை கட்டியுள்ளார். அதில் அவரது தந்தை பொன்னாண்டி, தாய் மீனாம்பாள் ஆகிய இருவரின் தத்ரூப சிலையை செய்து வைத்து வழிபட்டு வருகிறார்.
பொன்னாண்டி – மீனாம்பாள் தம்பதிக்கு 5 பெண் பிள்ளைகள் மற்றும் 2 ஆண் பிள்ளைகள் என ஏழு பிள்ளைகளும் திருமணம் முடிந்து அவர்களுடைய பிள்ளைகள் பேரன் பேத்திகள் என தனித்தனி வீடுகளில் வாழ்ந்து வந்தாலும் பொன்னாண்டி மீனாம்பாள் வாரிசுகள் சுபதுக்க நிகழ்ச்சிகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். மேலும் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இவர்களது குடும்பத்தினர் அந்தப் பகுதியில் பெரிய குடும்பம் என்று அழைக்கப்படுகின்றனர்.
தனது தாய் தந்தை மீது அதிக அன்பு கொண்ட விருப்ப ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளர் ரமேஷ் பாபு இது குறித்து கூறுகையில், தற்போது உள்ள தலைமுறையினருக்கு பெற்றோர் மீதும் முன்னோர்கள் மீதும் மரியாதை செலுத்துவது மற்றும் அன்பு காட்டுவது குறைந்து வருகிறது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த வருங்கால சந்ததியினருக்கு தங்களது முன்னோர்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளவும், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மீது பாசத்துடன் தொப்புள் கொடி உறவுகளை பேணி பாதுகாப்பதற்கும் சிறுவயதில் இருந்தே அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்க வலியுறுத்தி வருவதாகவும், அதற்கான ஒரு செயலாகவே தனது தாய் தந்தைக்கு வீட்டிலேயே சிறிய கோவிலை கட்டி வழிபட்டு வருவதாக தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM