சேலம்: சேலத்தில் சினிமா ஆசை காட்டி மோசடி செய்த விவகாரத்தில் கைதான இயக்குநர், அரை நிர்வாண புகைப்படங்கள் சினிமாவுக்காக எடுத்தது என்று தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (38). இவர் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்கள், இளைஞர்களிடம் பணம் வசூலித்ததாகவும், இளம்பெண்கள் சிலரது வாழ்க்கையை சீரழித்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சூரமங்கலம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து வேல்சத்ரியன் மற்றும் அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து வேல்சத்ரியனை உதவி கமிஷனர் நாகராஜன் 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார். இரண்டு பெண்களின் அரை நிர்வாண புகைப்படங்கள் இருந்தது தொடர்பாக போலீசார் வேல்சத்ரியனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, சினிமாவில் வரும் ஒரு காட்சிக்காக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். அந்த சினிமா காட்சியில், ‘‘கதாநாயகியிடம் கதாநாயகன் உனது தாய் எங்கே என்று கேட்கும்போது ஒரு பிளாஷ் பேக் வரும். அதில் தனது தாய், கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருக்கும் காட்சியை தந்தை பார்த்து விட்டார். அப்போது, கோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் அரிவாளை எடுத்து இருவரையும் கொலை செய்து விட்டார்,’’ என்று கதாநாயகி தெரிவிப்பார். அந்த காட்சிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படம்தான் அவை என போலீசாரிடம் வேல்சத்ரியன் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயஜோதி எனது உதவியாளராக இருந்தார். அவருடன் மட்டும்தான் அவரது சம்மதத்துடன் நான் உறவு வைத்துக்கொண்டேன். இது எனது மனைவிக்கு தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.