தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“100 யூனிட்டுகளுக்குள்ளாக பயன்படுத்தக்கூடியவர்கள் ஒரு கோடி பேர் உள்ளனர். இந்த ஒரு கோடி நுகர்வோர்களுக்கு எந்தவிதமான மின்கட்டண உயர்வும் கிடையாது.101-லிருந்து 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்கள், 63,35,000 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதத்துக்கு 27.50 ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இது ஒருநாளுக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணம். அதேபோல், 201-லிருந்து 300 யூனிட்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய 36,25,000 விவசாயிகளுக்கு 72.50 ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 301-லிருந்து 400 வரை பயன்படுத்தும் 18,82,000 பேருக்கு மாதத்துக்கு 147.50 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி குறைந்தக் கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளன, கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதே கட்டணங்களை அருகாமையில் இருக்ககூடிய கர்நாடகாவோடு ஒப்பிடும்போது, 100 யூனிட்டுகள் வரை குறைந்த அளவிலேயே 4.30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இங்கே 100 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் அனைவருக்கும் இலவச மின்சாரம். அதே குஜராத்தை பார்த்தால், 100 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்களுக்கு, 5 .25 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை, இங்கே இலவசம். 101-லிருந்து 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் 63,35,000 பேர்களுக்கு 4.50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதில், 2.25 ரூபாயை தமிழ்நாடு முதல்வர் அவர்கள், எந்த அடித்தட்டு மக்களுக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு மானியமாக வழங்குவதற்கான ஒப்புதலை வழங்கியிருக்கிறார். 9,000 கோடி ரூபாய் கடந்தாண்டு மானியம் வழங்கிய நிலையில், இந்தாண்டு 3,500 கோடி அளவுக்கான மானியம் வழங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, வீட்டு உபயோக நுகர்வோர்களை பொறுத்தவரை, மிகக் குறைவாக மற்ற மாநிலங்களைவிட குறைவான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இன்னொருவகையில் பார்க்கும்போது, சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை 2,26,000 பேர் பயன்படுத்தக்கூடிய மின்சாரம் என்பது, மொத்தமுள்ள தொழில்முனைவோர்களில் 93 சதவிகிதம் பேருக்கு வெறும் 50 பைசா மட்டுமே மின்கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிலையில் இருக்கும் 19,28,000 வணிக நுகர்வோர்களுக்கும் 50 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 100 யூனிட்டுகள் மின்சாரம் இலவசத்தோடு சேர்த்து அவர்களுக்குத் தேவையான குறிப்பாக, குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி என இவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிற மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மின்சார வாரியத்துக்கு, அதற்கு உரிய நிதியை தமிழக முதல்வர் மானியமாக வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தாள் தொழிற்சாலை நடத்துபவர்கள்தான் மின்கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் 80 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மின்கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்றுவந்த பத்திரிகை செய்திகளை எடுத்துப் பார்த்தால், சில பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக `மின்கட்டணம் உயர்வு’ என்று செய்தி வெளியிட்டுள்ளன. இன்னும் சில பத்திரிகைகள் உள் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. மற்ற மாநிலங்களைவிட குறைவாகவே மின்கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்றார்.