அக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி நாட்டிற்கு கிடைக்கவில்லை எனின் 10 தொடக்கம் 12 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துனுவர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கூடிய விரைவில் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரிகளை கொண்டு வருமாறு கூறினோம். தற்போது இருப்பில் காணப்படும் நிலக்கரி தொகையானது எதிர்வரும் அக்டோபர் 20 – 25ஆம் திகதி வரையிலேயே போதுமானது.
அதன் பின்னர் மின் உற்பத்தியை முன்னெடுப்பதற்கு கட்டாயமாக நிலக்கரிகள் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி கொள்வனவு
அத்துடன் “நிலக்கரி கொள்வனவுக்கான மனுக்கோரல் ஒன்றை நாங்கள் முன்வைத்துள்ளோம். 4.5 மில்லியன் மெற்றிக் தொன் நிலக்கரி தொகைக்கான மனுக்கோரல் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கோரலை விரைவில் செயற்படுத்தவில்லை எனின் உரிய நேரத்திற்கு நிலக்கரி தொகையை கொண்டு வர முடியாது.
அத்துடன் குறைந்தபட்சம் அக்டோபர் 20ஆம் திகதியளவிலாவது குறித்த நிலக்கரி தொகை எமக்கு கிடைக்கப்பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனின் நுரைசோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று தொகுதிகளின் செயற்பாடுகளையும் இடைநிறுத்த நேரிடும்.
மின் துண்டிப்பு நேரம்
இதனால் அனல் மின் உற்பத்தி முழுமையாக இடைநிறுத்தப்படும். அதன் பின்னர் நீர் மற்றும் எரிபொருளை பயன்படுத்தியே மின் உற்பத்தி செய்ய முடியும்.
இதன்போது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மழைவீழ்ச்சி குறைவடைதல் போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் மின் துண்டிப்பு நேரமானது 10 அல்லது 12 மணித்தியாலங்களுக்கு நீடிக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.