இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பயணித்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதை அடுத்து அவர் விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.
பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டுள்ளார். அவர் பயணித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கே திரும்பியது. விமானத்தின் விமானி, கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கி உள்ளார்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ அல்லது மோசமான வானிலை காரணமாகவோ தரையிறக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி, தொழில்நுட்பக் கோளாறு காரணம் இல்லை என்றும் மோசமான வானிலை காரணமாகவே விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் இருந்து சாலை மார்க்கமாகப் பயணித்து குஜ்ரன்வாலா சென்ற இம்ரான் கான், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது, நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதற்கு தற்போதைய ஆட்சியாளர்களே காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் அதை உணரவில்லை என விமர்சித்த இம்ரான் கான், ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளே நாட்டை மோசமான நிலைக்கு இட்டுச் செல்வதாகக் குறிப்பிட்டார். இதை தடுக்க மக்கள் சக்திதான் ஒரே ஆயுதம் என தெரிவித்த இம்ரான் கான், ஆட்சியாளர்களுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை மக்கள் ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.