லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் கிரீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோஹினூர் வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கிரீடத்தில் அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் 1849 ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தான் இருந்தது. அதன் பின்னர் பிரிட்டிஷ் படைகள் இந்தியாவை கைப்பற்றிய உடன் அவை இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு 1850 ம் ஆண்டு விக்டோரியா மகாராணியிடம் வழங்கப்பட்டது.
105 காரட் மதிப்புள்ள கோஹினூர் வைரத்தின் தற்போதைய சர்வதேச மதிப்பின் படி சுமார் 140 முதல் 400 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த வைரத்தை மீட்க வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இங்கிலாந்து ராணி கடந்த 8 ம் தேதி வயது மூப்பு காரணமாக காலமானார். இதனையடுத்து கோஹினூர் வைரத்தை மீட்டு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தென்னாப்பிரிகா வைரம்
அதே போல் ஆப்ரிக்காவின் கிரேட்ஸ்டார் என்றழைக்கப்படும் உலகின் பெரிய வைரமும் ராணியின் கிரீடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வைரமும் 400 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வைரம் நட்பு மற்றும் அமைதியின் அடையாளமாக தங்களுக்கு வழங்கப்பட்டது என பிரிட்டிஷார் கூறி வருகின்றனர். ஆனால் அது காலனித்துவ காலத்தில் தென்னாப்பிரிகாவில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது என தென்னாப்பிரிகா கூறி வருகிறது.
மேற்கண்ட இரு வைரங்களும் மீண்டும் அந்தந்த நாட்டிற்கே திரும்ப கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் சமூக வலை தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement