விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வைக்கப்பட்டுள்ள 89 அடி விநாயகர் சிலை நேற்று மதியம் லேசாக ஒரு அடி வரை இடது புறம் சாய்ந்தது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விசாகப்பட்டினம், காஜுவாகா பகுதியில் விநாயகர் உற்சவ கமிட்டியினர் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி, அப்பகுதியில் இந்த ஆண்டு 89 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலையை வைத்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிமுதல், தினமும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.ஆந்திராவிலேயே மிக உயரமான இந்த விநாயகர் சிலையை தரிசிக்க பல ஊர்களில் இருந்தும் தினமும் பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இந்த விநாயகர் சிலையை வரும் 18-ம் தேதி ஊர்வலமாக கொண்டு சென்று விசர்ஜனம் செய்ய கமிட்டியினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், நேற்று மதியம் இந்த சிலை திடீரென இடது பக்கம் லேசாக சாய்ந்தது.
இதனை கண்டு கமிட்டியினர் மட்டுமின்றி, அங்கிருந்த பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த சிலையை உருவாக்கியவர்களை அழைத்து வந்து முட்டுக்கொடுத்துள்ளனர். ஆதலால், சுமார் 100 அடி தூரத்தில் இருந்தே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தகவல் அறிந்த போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சிலை சாய்ந்து விழுந்து அசம்பாவிதம் நடக்கும் முன்னரே விசர்ஜனம் செய்ய வேண்டுமென போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால், தற்போது பெய்து வரும் மழை காரணமாக உடனடியாக சிலையை அங்கிருந்து கொண்டு சென்ற முயன்றால், மழையில் கரைந்து அசம்பாவிதம் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு என சாலை மற்றும் கட்டிடத்துறை அதிகாரிகள், மற்றும் சில சிவில் பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இறுதியில் பக்தர்களுக்கு தரிசனத்தை நிறுத்தி வைத்து, வரும் திங்கட்கிழமை சுவாமி சிலையை விசர்ஜனம் செய்ய போலீஸார் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.