பியாங்யாங்: எதிரி நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்காவிடம் 5,800 அணு ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 6,375 அணு ஆயுதங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வடகொரியாவிடம் சுமார் 40 அணு ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வடகொரிய நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் அணு ஆயுதம் தொடர்பான புதிய சட்டம் இயற்றப்பட்டது. எந்தெந்த சூழ்நிலைகளில் அணுஆயுதத்தை பயன்படுத்தலாம் என்று வட கொரியா ஏற்கெனவே ஒரு கொள்கை வகுத்து வைத்திருந்தது. அதில் தற்போது சில சூழ்நிலைகளை கூடுதலாக சேர்த்துள்ளது. குறிப்பாக ஆட்சியை கவிழ்க்க சதி நடந்தாலும் அணுஆயுத தாக்குதல் நடத்த அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி அணு ஆயுதங்களை பயன்படுத்த வடகொரிய அதிபருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எதிரி நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டால் தற்காப்புக்காக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று புதிய சட்டத்தின் மூலம் வடகொரியா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாடாளுமன்றத்தில் பேசியதாவது:
வடகொரியாவை அழிக்க அமெரிக்கா தீவிர முயற்சி செய்கிறது. இதன் ஒரு பகுதியாக வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்தைக் கைவிட செய்ய பல்வேறு வகைகளில் நிர்பந்தம் அளிக்கிறது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தாலும் அணு ஆயுதங்களை கைவிட மாட்டோம். அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையிலும் பங்கேற்க மாட்டோம்.
உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம். எங்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூனில் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா, தென்கொரியா, வடகொரியா இடையே முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.
தற்போது அணு ஆயுதங்களை கைவிட மாட்டோம். அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று வடகொரியா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருப்பது உலகின் அமைதிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.