பாரிஸ்: வட கொரியாவின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சட்ட அறிவிப்பு சர்வதேச அமைதிக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் என்று பிரான்ஸ் நாடு கருத்து தெரிவித்துள்ளது.
வடகொரியா நாடானது அவ்வப்போது மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனை கொரிய தீபகற்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வடகொரியா மேற்கொள்ளும் அணு ஆயுத சோதனைகளால் தென்கொரியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் போர் அச்சுறுத்தல் சூழலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சட்டத்தை வடகொரியா நிறைவேற்றியுள்ளது. திரும்பப் பெற முடியாத வகையில் நிறைவேற்றபட்டுள்ள இந்த சட்டத்தால் உலக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டத்தால் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு முடிவா?: இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வட கொரியாவின் இந்த அணு ஆயுதப் பயன்பாடு சட்ட அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. வட கொரியாவின்இந்த புதிய அறிவிப்பு சர்வதேசமற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது வடகொரியாவின் இந்த நடவடிக்கை அணு ஆயுதமற்ற பேச்சு வார்த்தைக்கான சாத்தியத்தை முற்றிலும் நீக்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது.