சென்னை: சினிமாவிலும் அரசியலிலும் நடிகர் விஜயகாந்துடன் தொடர்ந்து பயணிப்பவர் நடிகர் மீசை ராஜேந்திரன்.
இவர் சமீபத்தில் விஜயகாந்த் அவர்களைப் பற்றி பல பேட்டிகளில் விரிவாக பேசி வருகிறார்.
அப்படி ஒரு பேட்டியில் விஜயகாந்த் இயக்கிய படத்தில் தான் நடித்த அனுபவத்தை கூறியுள்ளார்.
ஜூனியர் ஆர்டிஸ்ட்
விஜயகாந்த் ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக வேலை செய்து கொண்டிருந்தார். உணவு இடைவேளையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அந்தப் படத்தின் கதாநாயகன் ஷாட்டுக்கு ரெடியாகி வந்துவிட்டதால் அவருடன் நடிக்க வேண்டிய விஜயகாந்த் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவரது தட்டை பிடுங்கிவிட்டு நடிக்க அழைத்தார்களாம். அப்போதுதான் தான் ஒரு நடிகனானால் உணவு பிரச்சினை யாருக்கும் இருக்கக்கூடாது என்பதை முடிவு செய்தாராம். இப்போது அனைவரும் விஜயகாந்தின் உணவு உபசரிப்பை பற்றி பாராட்டுவதற்கு அதுதான் ஆரம்பப் புள்ளியாக இருந்துள்ளது.
மரியாதை
விஜயகாந்த் விருதகிரி என்கிற படத்தை இயக்கியபோது அதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் மீசை ராஜேந்திரன். ஒரு அக்யூஸ்ட்டை பிடித்து தள்ளும் காட்சியில் அவர் சரியாக நடிக்கவில்லையாம். அப்போது தன்னை அக்யூஸ்ட்டாக நினைத்து பிடித்து தள்ளுமாறு விஜயகாந்த் கூற பலமுறை மீசை ராஜேந்திரன் தயங்கியதாகவும் பின்னர் ஒரு போலீஸ் இப்படித்தான் அக்யூஸ்டை தள்ளுவான் என சட்டை காலரை கழுத்தோடு சேர்த்து பிடித்து தள்ளுங்கள் என்று கட்டளையிட, தானும் கேப்டனை அக்யூஸ்ட் போல இழுத்துச் சென்றதாகவும் இதுபோலத்தான் நடிக்க வேண்டும் என்று பாராட்டியதாகவும் ராஜேந்திரன் கூறியுள்ளார். துணை இயக்குநர்கள் உள்பட அனைவரையும் வாங்க போங்க என்று மரியாதையுடன்தான் பேசுவாராம் விஜயகாந்த்.
லைட் வாங்கி நடிப்பது
சகாப்தம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று விஜயகாந்த் நடித்துக் காட்டிய பின்னர் மீசை ராஜேந்திரன் அதே போல் நடித்தாராம். அப்போது நான் செய்ததை நீங்கள் நன்றாக கவனிக்கவில்லை என்று மீண்டும் அந்த காட்சியில் நடித்துக் காட்டினாராம் விஜயகாந்த். அப்போது நடிகர்களுக்காக செட் பண்ணி வைத்த லைட் வெளிச்சத்தை வாங்கியபடி விஜயகாந்த் நடித்துள்ளார். அனுபவம் மிக்க நடிகர்களால்தான் அதை செய்ய முடியும். அந்த நுட்பத்தை அவர்தான் எனக்கு கற்றுக் கொடுத்தார் என்று கூறியுள்ளார்.
ஒரே பதவி
நடிகர் சங்க தலைவராக சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி தொடங்கியவுடன் நடிகர் சங்க பதவியை ராஜினாமா செய்தாராம். அனைவரும் வேண்டாம் என்று கூற ஒரு நபர் ஒரு பதவியில்தான் இருக்க வேண்டும் இரண்டு பதவிகளில் இருந்தால் இரண்டு தரப்பினருக்கும் பிரச்சனை வரும் பொழுது அதனை சமாளிப்பதில் சிக்கல் வரும். ஆனால் இப்போதுள்ளவர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட பதவிகளில் இருக்க விரும்புகிறார்கள் என்று மறைமுகமாக கூறியுள்ளார் மீசை ராஜேந்திரன்.