விஜயகாந்த் பட இயக்குநர் டைரக்ஷனில் கதாநாயகனாக ஆர்கே சுரேஷ்!

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி நல்லாசியுடன், ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ் பெருமையுடன் வழங்கும், 5E கிரியேஷன்ஸ் மற்றும் ஜெசாரா மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.  விஜயகாந்தை வைத்து “கண்ணுபடப் போகுதய்யா” என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் துவக்கவிழா பூஜை நடைபெற்றது.  இந்த நிகழ்வில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, சாம்ஸ், டேனியல் ஆனி போப் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் பேசும்போது, “சென்னை சிட்டியும் மதுரை நேட்டிவிட்டியும் கலந்த ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த கதைக்கு ஆர்.கே.சுரேஷ் தான் பொருத்தமாக இருந்தார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்தப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.  படத்தின் நாயகன் ஆர்கே சுரேஷ் பேசும்போது, “இயக்குநர் பாரதி கணேஷ் என் தந்தை காலத்தில் இருந்தே எனக்கு நெருக்கமானவர். எப்படி விஜயகாந்த்தின் வெற்றிக்கு அவர் முதுகெலும்பாக இருந்தாரோ, அதேபோல தான் எனக்கும். அவர் சொன்ன மூன்று கதைகளில் இந்த கதை ரொம்ப பிடித்திருந்ததால் முதலில் இதை படமாக்க தீர்மானித்தோம். இந்த படத்தை எப்படியும் வெற்றிப்படமாக்க வேண்டும் என ஒரு வெறியுடன் இருக்கிறார் இயக்குநர் பாரதி கணேஷ். அதனால் இப்போதைய டிரெண்டுக்கு ஏற்றமாதிரி நேட்டிவிட்டியுடன் சிட்டியியுடன் நடக்கும் கதையை உருவாக்கியுள்ளார்.

நான் தற்போது தமிழில் மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். தெலுங்கில் இரண்டு படங்களில் வில்லனாகவும் மலையாளத்தில் ஒரு படத்திலும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறேன். குறிப்பாக தெலுங்கில் சூப்பர்ஸ்டார் நடிகர் ஒருவரின் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறேன். இயக்குநர்கள் பாலா, முத்தையா ஆகியோர் கொடுத்த பயிற்சிதான் இந்த அளவுக்கு நான் ஒரு நடிகராக வளர காரணம்.  நான் நடித்த ‘விசித்திரன்’ படம் கிட்டத்தட்ட அமேசான் பிரைமில் ஒருகோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. நான் தயாரித்த ‘மாமனிதன்’ திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட்டபோது இரண்டரை கோடி ரூபாய் தான் கிடைத்தது. ஆனால் அதுவே ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியிட்டபோது 64 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அந்தவகையில் கிட்டத்தட்ட 24 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலேயே அதிக வசூல் செய்த படம் அதுதான்.

என்னிடம் படம் ரிலீஸ் செய்யச்சொல்லி வருபவர்களிடம் படத்தை பார்த்ததும் நானே சில படங்களை தியேட்டருக்கு வேண்டாம், ஓடிடிக்கு கொடுத்து விடுங்கள் என சொல்லிவிடுகிறேன். ஏனென்றால் ஓடிடிக்கு என எடுக்கும் படத்தை தியேட்டருக்கு தூக்கிட்டு போகக்கூடாது. படம் எடுக்கும்போதே எதில் திரையிட போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும். இங்கே எட்டு நடிகர்களுக்கு மட்டும் தான் தியேட்டர்களில் நல்ல புக்கிங் மற்றும் ஓப்பனிங் இருக்கிறது.  மாதாமாதம் எனது நிறுவனத்தின் வெளியீடாக ஒரு படமாவது வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது சமீபத்தில் வெளியான ‘லைகர்’ படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் தமிழகத்தின் ரிலீஸ் செய்தேன். ஆனால் அது ஓரளவுக்குத்தான் போனது. ஓடிடி கன்டெண்டா? தியேட்டர் கன்டெண்டா? எனப் பார்த்து ஒரு படத்தை வெளியிட வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம் எனக் கூறினார். 

நடிகர் ராதாரவி பேசும்போது, ‘இந்த படத்தின் இயக்குநர் பாரதி கணேஷ் உண்மையையும் விசுவாசத்தையும் மறக்காத ஒரு நபர். அவர் இயக்கிய “கண்ணுபடப் போகுதய்யா” படத்தில் நடித்திருந்தேன். தான் உருவாக்கும் எல்லா கதைகளிலும் எனக்கென ஒரு பாத்திரம் இருக்கும்படி எப்போதுமே கதையை உருவாக்குவார். நான் அவரிடம் கதை எல்லாம் கேட்கவில்லை. கதை கேட்பது, ஃபைல் பார்ப்பது இதெல்லாம் தவறான பழக்கம்.  ஆர்.கே.சுரேஷ் படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் வேண்டும் என எப்போதும் நான் உரிமையுடன் கேட்பேன். தவிர இந்த படத்தின் மூலமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு இஸ்லாமிய தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் நடிக்கிறேன். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் ஒரு படத்தில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன் இந்த நிகழ்வில் ஒரு நடிகராக இல்லாமல், குடும்பத்தில் ஒருத்தனாக வந்து கலந்து கொண்டுள்ளேன்.

படத்தயாரிப்பில் முன்பெல்லாம் ஒப்பந்தமும் சம்பளமும் வாக்குறுதியும் வாய் வார்த்தையாக இருந்தவரை சினிமா நல்லபடியாக இருந்தது. எப்போது கார்ப்பரேட் உள்ளே நுழைந்து நூறு பக்கங்களுக்கு மேல் கையெழுத்து வாங்க ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே அது கார் வியாபாரத்தை விட மோசமாகி விட்டது” என்று கூறினார்.  நடிகர் டேனி பேசும்போது, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ஹீரோவுக்கு சமமாக எனக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து போஸ்டர்களை வெளியிட்டு எனக்கு நல்ல அறிமுகம் கிடைக்க உதவியவர் ஆர்கே சுரேஷ். அவருடன் முதல் முறையாக இந்த படத்தில் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. ராதாரவியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு கணக்கு வாத்தியார் போலவே தோன்றும் அந்த அளவுக்கு அவர் மீது பயம்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.