சென்னை: “சென்னையில் ஏற்கெனவே புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய மூன்று இடங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கிவருவதாகவும், மேலும் கூடுதலாக இரண்டு நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளிடப்பட்டுள்ள செய்தி: “பெருநகர சென்னை மாநகராட்சி, கால்நடை மருத்துவ பிரிவின் சார்பில் பிராணிகள் நல தன்னார்வலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சி, கால்நடை மருத்துவ பிரிவின் சார்பில் பிராணிகள் நல தன்னார்வலர்களுக்கான ஆலோசனை கூட்டம் முதன்மை செயலாளரும், ஆணையாளருமான ககன்தீப் சிங்பேடி, தலைமையில் (செப்.9)அன்று ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டது. மேலும் தெரு நாய்கள் பிடிக்கப்படும் முறை, நாய் வண்டியின் பராமரிப்பு, அறுவை சிகிச்சை மற்றும் அதற்கு பின்னர் அவற்றின் பராமரிப்பு, அவற்றை பிடித்த இடத்திலேயே மீண்டும் விடுவிப்பது ஆகிய செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முதன்மை செயலாளரும், ஆணையாளருமான ககன்தீப் சிங்பேடி பேசியது: சென்னையில் 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 57,366 தெருநாய்கள் உள்ளன. சென்னையில் ஏற்கெனவே புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய மூன்று இடங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கிவருவதாகவும், மேலும் கூடுதலாக இரண்டு நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்களும், ஒவ்வொரு வாகனத்திலும் 5 பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவர் உள்ளனர். நாய்களை பிடிப்பதற்காக 64 வலைகள் உள்ளன.
நாய்களை பிடிக்கும் பொழுது பணியாளர்கள் மனிதாபிமானத்துடன் நாய் இன கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி பிடிக்க வேண்டும். நாய்களை பிடிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வலைகளை பயன்படுத்தி மட்டுமே நாய்களை பிடிக்க வேண்டும். நாய்களை துன்புறுத்தக்கூடிய வகையில் கயிறு மற்றும் இதர உபகரணங்களை கொண்டு பிடிக்கக் கூடாது. நாய் பிடிக்கும் வாகனங்களை அவ்வப்பொழுது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாய் பிடிக்கும் பணியில் உள்ள பணியாளர்களுக்கு சீருடை, கையுறைகள் உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாய் பிடிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் மிகவும் கணிவுடன் நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த வயதுடைய நாய்கள் மற்றும் இளம் நாய்களை கண்டிப்பாக பிடிக்கக் கூடாது எனவும், உரிய வயதுடைய நாய்களை மட்டுமே பிடித்து நாய் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாய்கள் பிடிக்கப்பட்ட பிறகு மாநகராட்சியின் மூன்று நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கால்நடை உதவி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாமா என முடிவு செய்யப்படுகிறது. நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு மேற்கொள்வதற்கு முன்னதாக அவற்றினுடைய உடல்நிலை, உடல் வெப்பநிலை, எடை போன்ற காரணிகள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு நாய் இன கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படுகின்றன.
அவ்வாறு பரிசோதிக்கப்படும் பொழுது வேறு ஏதேனும் உடல்நலக் குறைவுகள் உள்ள நாய்கள் தனியாக கண்காணிக்கப்பட்டு முறையான சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 2022 -23 ஆம் ஆண்டில் இதுவரை 7018 தெருநாய்களுக்கு நாய் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பிராணிகள் நல தன்னார்வலர்கள் கூட்டத்தினை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்திடவும், நாய் இனக்கட்டுப்பாடு கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதம் ஒரு முறை நடத்திடவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் தெரு நாய்கள் இனக்கட்டுப்பாட்டு திட்ட செயல்பாடுகளை மேம்படுத்தவும்” ஆணையாளர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.