75 ஆண்டுக்குப் பின் சகோதரியை சந்தித்த முதியவர்| Dinamalar

இஸ்லாமாபாத்:இந்தியா – பாக்., பிரிவினையால் குடும்பத்தினரை பிரிந்த சீக்கியர், 75 ஆண்டுக்குப் பின், தன் சகோதரியை சந்தித்த உருக்கமான சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அமர்ஜித் சிங், 80. கடந்த 1947ல் இந்தியா – பாக்., பிரிவினையின்போது, இவர், தன் குடும்பத்தினரை பிரிந்தார்.

சந்திக்க விருப்பம்


இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர், பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். அமர்ஜித்
சிங்கையும், அவரது மூத்த சகோதரியையும் ஜலந்தரில் விட்டுச் சென்றனர். அவர்கள் இருவரையும்ஜலந்தரைச் சேர்ந்த ஒரு சீக்கிய குடும்பத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். இதனால் அமர்ஜித் சிங்கும்,அவரது சகோதரியும் முறைப்படி சீக்கிய மதத்துக்கு மாறினர். இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த அமர்ஜித் சிங்கின் பெற்றோருக்கு, குல்சூம் என்ற பெண் குழந்தை பிறந்தது.
நாளடைவில், தனக்கு இந்தியாவில் ஒரு சகோதரனும், சகோதரியும் இருப்பதை அறிந்த குல்சூம், அவர்களை சந்திக்க முயற்சித்து வந்தார். இது குறித்து தன் தாயிடம் விபரங்களை கேட்டறிந்தார். தற்போது குல்சூமுக்கு 65 வயதாகி விட்டது. சில மாதங்களுக்கு முன், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து, குல்சூமின் தந்தையின் நண்பர் ஒருவர், பாகிஸ்தானுக்கு வந்திருந்தார்.
அவரிடம், தன் சகோதரன், சகோதரி பற்றிய விபரங்களையும், அவர்கள் வசித்த கிராமத்தைப் பற்றியும் தெரிவித்த குல்சூம், அவர்களை பற்றி தகவலை திரட்டித் தரும்படி கோரிக்கை விடுத்தார்.

பஞ்சாபுக்கு திரும்பிய நண்பர், அமர்ஜித் சிங்கை கண்டுபிடித்து, அவரைப் பற்றிய தகவலை குல்சூமுக்கு தெரிவித்தார்.அமர்ஜித் சிங்குடன், ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக தொடர்பை ஏற்படுத்திய குல்சூம், அவரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அப்போது தான், மூத்த சகோதரி ஏற்கனவே இறந்து விட்ட தகவல் அவருக்கு தெரிய வந்தது.

மகிழ்ச்சி


இந்நிலையில், பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு வரப் போவதாகவும், அப்போது நேரில் சந்திக்கலாம் என்றும் அமர்ஜித் சிங், தன் சகோதரியிடம் தெரிவித்தார். இதையடுத்து, சமீபத்தில் கர்தார்பூர் குருத்வாராவுக்கு வந்த அமர்ஜித் சிங்கை, பாகிஸ்தானின் பைசலாபாதில் இருந்த வந்த குல்சூம், தன் குடும்பத்தினருடன் வந்து சந்தித்தார்.

அப்போது இருவரும் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தனர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர். வயது மூப்பு காரணமாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அமர்ஜித் சிங்கிடம், நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசினார், குல்சூம். ‘இப்போது ஏற்பட்டு உள்ள மகிழ்ச்சியையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கு எங்களுக்கு வார்த்தைகள் இல்லை’ என, அமர்ஜித் சிங்கும், குல்சூமும் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.