ஆதரவற்ற இளைஞன் உலகையே தீய சக்திகளிடமிருந்து காக்கும் அஸ்திரமானால் அதுதான் `பிரம்மாஸ்திரா’ (Brahmastra).
DJ-வாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கும் சிவாவுக்கு இஷாவைப் பார்த்தவுடன் காதல். ஒரு கட்டத்தில், சிவாவுக்கு நெருப்பினால் ஒன்றுமே ஆகாது என்ற ரகசியத்தைக் கண்டறிகிறார் இஷா. தனக்குச் சம்பந்தமில்லாத ஒருவர், சிலரால் கொல்லப்படுவதையும் அவரிடமிருந்து அஸ்திரம் பறிக்கப்பட்டு தீயசக்திகள் தலைதூக்குவதையும் அருகிலிருந்து பார்த்ததுபோல உணர்கிறார் சிவா. அதைத் தடுத்து நிறுத்த, காதலி ஈஷாவுடன் ஆபத்திலிருக்கும் அடுத்த நபரைக் காக்க வாரணாசி செல்கிறார்.
‘பிரம்மாஸ்திரம்’ என்ற மாபெரும் அஸ்திரம் குறித்தும், பிற அஸ்திரங்களைக் காக்கும் மனிதர்கள் அடங்கிய ‘பிரம்மான்ஷ்’ என்ற ரகசியக் குழு குறித்தும் அறிந்துகொள்கிறார்கள். அஸ்திரங்களைக் கைப்பற்ற நினைக்கும் தீய சக்தியைத் தடுக்க, பிரம்மான்ஷ் குழுவின் குருவிடம் தஞ்சம் அடைகிறார்கள். சிவா உண்மையிலேயே யார், அவருக்கும் அஸ்திரங்களுக்கும் நெருங்கும் தீய சக்திக்கும் உண்டான தொடர்பு என்ன என்பதை ஃபேன்டஸி, ஆக்ஷன், சூப்பர்ஹீரோ வகையறா கதையாகச் சொல்கிறது இந்த ‘பிரம்மாஸ்திரா’.
சிவாவாக ரன்பீர் கபூர், இஷாவாக ஆலியா பட். ரியல் லைஃப் ஜோடி என்பதாலோ என்னவோ, சற்றே சுமாரான காதல் காட்சிகளைக்கூட இவர்களின் அற்புதமான கெமிஸ்ட்ரி மீட்டெடுக்கிறது. துடிப்பான இளைஞனாக, அதே சமயம் தனக்குள் இருக்கும் சக்திகள், அது குறித்த கேள்விகள் என அதற்குரிய குழப்பமான முகத்துடனே வலம் வருகிறார். கேள்விகளுக்கு விடைகாண எந்த எல்லை வரையும் போகும் அவரின் கதாபாத்திர கிராப் ஒரு பக்கா சூப்பர்ஹீரோவுக்கான நல்லதொரு ஆரம்ப அத்தியாயம் (Origin Story). சுற்றியும் பல வகையான சக்திகளுடன் உலாவரும் சூப்பர்ஹீரோக்களுக்கு மத்தியில் சாதாரண மனுஷியாக ஆலியா பட். என்றாலும், கதையை நகர்த்தும் கதாபாத்திரமாகப் படம் நெடுக வருகிறார். சுமாரான வசனங்கள், காட்சிகளைக்கூட தன் குறும்பால் மெருகேற்றியிருக்கிறார்.
குருவாக வரும் அமிதாப் பச்சன், இரண்டாம் பாதி முழுக்கவே ஆக்கிரமித்தாலும், பெரும்பாலான வேலைகளை ரன்பீர் கபூரே செய்கிறார் என்பதால், இவரின் பாத்திரம் அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது. வில்லியாக வரும் ‘நாகின்’ (Naagin) புகழ் மௌனி ராய், மார்வெல்லின் வாண்டா மேக்ஸிமாஃபை நினைவூட்டினாலும் வில்லன்களில் சற்றே ஆறுதலளிப்பது அவரின் பாத்திரம் மட்டுமே. ஷாருக்கானுக்கு மீண்டும் ஒரு முக்கியமான படத்தில் கௌரவ வேடம். தயக்கமின்றி ஒரு பெரிய ஹீரோ தொடர்ந்து இவ்வாறான பாத்திரங்களைச் செய்வது பாராட்டுக்குரியது. நாகார்ஜுனாவுக்கு ஒரு சிறிய வேடம். ஆனால், அது எதற்கு என்பதில்தான் தெளிவில்லை. பான் இந்தியப் படம் என்பதால் தெலுங்கு மார்க்கெட்டுக்கும் ஒருவர் வேண்டும் என வாலன்ட்டியராக அவரை வண்டியில் ஏற்றியிருப்பதாகவே தெரிகிறது. அவராவது பரவாயில்லை, டிம்பிள் கபாடியா வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
ரன்பீர் கபூரை வைத்தே இரண்டு ஃபீல்குட் படங்கள் கொடுத்த இயக்குநர் அயன் முகர்ஜி, இந்த முறை 400 கோடிகளுக்கும் அதிகமான பட்ஜெட்டில் மார்வெல், DC படங்களின் யுனிவர்ஸ் கணக்கான கதைக் களத்துடன் துணிச்சலாகக் களமிறங்கியிருக்கிறார். ரொம்பவும் ஆன்மிகம் பேசாமல், புராணங்கள் பக்கம் எல்லாம் போகாமல் அஸ்திரங்கள், அதற்கான சக்திகள், எல்லாவற்றையும் அழிக்கும் ‘பிரம்மாஸ்திரம்’ என ஃபேன்டஸியாக மட்டுமே கதையைக் கொண்டு சென்றது ஆறுதலான விஷயம். சூப்பர்ஹீரோ படம், ஃபேன்டஸி, கலர் கலர் கிராபிக்ஸ், பிரமாண்ட செட்கள் என்றாலும் கதையின் ஆதார புள்ளியாக தன் முந்தைய படங்களைப் போலக் காதலையே நிறுவியிருக்கிறார்.
படத்தின் பிரச்னை என்னவென்றால் ‘அஸ்திராவெர்ஸ்’ (Astraverse) என்று பெயரை எல்லாம் புதிதாக யோசித்தவர்கள் கதை மற்றும் பிற விஷயங்களுக்காகப் பல சூப்பர்ஹீரோ படங்களிலிருந்து கடன் வாங்கியிருக்கிறார்கள். விதவிதமான அஸ்திரங்கள் மார்வெல்லின் இன்ஃபினிட்டி ஸ்டோன்ஸையும், சிவாவின் கதை சக்திமானின் பின்கதையையும், கிராபிக்ஸ் சண்டைக் காட்சிகள் ஸ்டார்வார்ஸ், ஹாரிபாட்டர் உள்ளிட்ட படங்களையும் நினைவூட்டுகின்றன. அதுவும் அமிதாப்பின் குருகுல வீடு, எக்ஸ்-மென் படத் தொடரின் புரொபசர் சார்ல்ஸ் சேவியரின் பள்ளியையும், டிம் பர்டன் இயக்கிய ‘Miss Peregrine’s Home for Peculiar Children’ படத்தையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன. அஸ்திரங்கள் என இந்திய கலாசாரத்தோடு பொருந்திப் போன கருவைப் பிடித்தவர்கள், அதை உலகமாகக் கட்டமைக்கும்போது ஹாலிவுட்டில் கடன் வாங்கியது சறுக்கல்.
இந்த ஒரு காரணத்தால் படத்தின் மேக்கிங், கிராபிக்ஸ் போன்ற விஷயங்கள் எதிர்பார்த்ததைவிட அற்புதமாகவே இருந்தாலும் அவை அனைத்தும் பார்த்துப் பழகிய உணர்வையே கொடுக்கின்றன. செட் பீஸ், யுத்தக் காட்சிகள், லொக்கேஷன்கள் எனப் பலவற்றிலும் லோக்கலான விஷயங்களைத் தொட்டிருந்தால், நிச்சயம் ‘பிரம்மாஸ்திரா’ நமக்கான ஒரு அவெஞ்சர்ஸாக மாறியிருக்கும்.
இது போதாதென்று ரன்பீர் கபூரின் பெற்றோர் குறித்த கதையில் கொஞ்சம்கூட ஆழமில்லை. நிறைய விஷயங்களை மறைத்தே வைத்து இரண்டாவது பாகத்தில் பதில் சொல்கிறோம் என்ற லீடுடன் முடித்திருக்கிறார்கள். தேவையற்ற சில காதல் காட்சிகளைக் கத்தரித்துவிட்டு, வில்லி மௌனி ராய், நாயகி ஆலியா பட் ஆகியோரின் பின்கதைகள் குறித்து கொஞ்சம் கூடுதலாகப் பேசியிருந்தால் ‘பிரம்மாஸ்திரா’வின் மனிதர்கள் குறித்து நமக்கும் ஒரு முழுமையான பிம்பம் கிடைத்திருக்கும்.
ப்ரீத்தம் இசையில் ‘கேசரியா’ பாடல் ரன்பீர் – ஆலியா காதலுக்கான கொண்டாட்டம் என்றால் ‘தேவ தேவா’ பாடல் ரன்பீர் கதாபாத்திரத்தின் உருமாற்றத்துக்கான மெலடி. சைமன் பிராங்க்ளனின் பின்னணி இசை சண்டைக் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. ஐந்து ஒளிப்பதிவாளர்கள் சேர்ந்து IMAX மற்றும் 3D அனுபவத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார்கள். VFX உள்ளிட்ட விஷயங்களிலும் குறை ஏதுமில்லை.
கருவைத் திரைக்கதையாக மாற்றும்போது அந்நியத் தன்மையுடன் அணுகாமல், படத்தின் கதாபாத்திரங்களை எழுதும்போது கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் ‘பிரம்மாஸ்திரா’ அனைவருக்குமான அட்டகாசமான சூப்பர்ஹீரோ படமாக அமைந்திருக்கும். இப்போது குழந்தைகளுக்கான கொண்டாட்ட சினிமா என்ற அளவில் தன் வெளியைச் சுருக்கிக் கொள்கிறது.