சென்னை மாநகரில் நடைபெறும் விளையாட்டு தொடர்களுள் சென்னை ஓப்பன் டென்னிஸுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடமுண்டு.
ரஃபேல் நடால் தொடங்கி ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா வரை உலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இத்தொடரில் பங்கேற்றிருக்கின்றனர். 1996-ம் ஆண்டு டெல்லியில் ஒரு சர்வதேச டென்னிஸ் தொடர் ‘Mc-dowell open’ என்ற பெயரில் நடைபெற்றது. பின்னர் 1997-ல் இத்தொடர் சென்னைக்கு மாற்றப்பட்டது. 2000-ம் ஆண்டு முதல் இது ATP தொடராக மாறியது. ‘Gold flake open, Tata open, Chennai open, Aircel Chennai open’ என வெவ்வேறு ஸ்பான்சர் பெயர்களில் அழைக்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம் விலகிய பின்னர், இத்தொடருக்கு புதிய ஸ்பான்சர் கிடைக்காததால் 21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்று வந்த தொடர் புனே நகருக்கு மாற்றப்பட்டது. இப்போது மறுபடியும் இத்தொடர் சென்னை மாநகருக்கே திரும்பியிருக்கிறது. அதுவும் பெண்களுக்கான WTA தொடராக!
WTA:
பில்லே ஜீன் கிங் என்பவரால் 1973-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது WTA. பெண்களுக்கான தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இத்தொடரே முதல் இடத்தில் உள்ளது. 80-கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1650 வீராங்கனைகள் உலகம் முழுவதும் நடைபெறும் 50 தொடர்களில் ஆண்டுதோறும் பங்கேற்று வருகின்றனர்.
நட்சத்திர வீராங்கனைகள்:
இத்தொடரின் டாப் ஸீட் வீராங்கனையாக இருப்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த எலிசன் ரிஸ்க்கே அமிர்தராஜ். சர்வதேச ஒற்றையர் புள்ளிப் பட்டியலில் 29-வது இடத்தில் அவர் உள்ளார். சமீபத்தில் நடந்த சின்சினாட்டி ஓப்பன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவரான கரோலின் கிரேசியா மற்றும் பெல்ஜியம் நாட்டின் எலிஸே மெர்டன்ஸ் ஆகியோர் பங்கேற்க இருந்த நிலையில் அவர்கள் இருவரும் இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர். 2014-ம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றவரான பைனலிஸ்ட் யூஜெனி பௌசர்ட் மற்றும் இந்தியாவின் அன்கிதா ரெய்னா ஆகியோர் ஒற்றையர் பிரிவுக்கான ‘Wild card entry’ மூலம் இத்தொடரில் விளையாட இருக்கின்றனர். ஷர்மதா பாலு மற்றும் ரியா பாட்டியா ஆகியோருக்கு இரட்டையர் பிரிவுக்கான வைல்ட்-கார்டு என்ட்ரி கிடைத்துள்ளது.
எங்கு & எப்போது:
நுங்கம்பாக்கம் SDAT மைதானத்தில் செப்டம்பர் 12 முதல் 18 வரை இத்தொடர் நடைபெறவுள்ளது. ஒற்றையர் பிரிவுக்கான ஆட்டங்கள் Round-32-ல் இருந்தும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் Round-16-ல் இருந்தும் நடைபெற உள்ளது. இதுதவிர ஒற்றையர் பிரிவுக்கான தகுதி சுற்றுகள் நேற்றைய தினமே தொடங்கிவிட்டன. தொடரின் மொத்த பரிசுத்தொகையாக 250,000 அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுபவருக்கு 280 தரவரிசை புள்ளிகள் கிடைக்கும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு 180 தரவரிசை புள்ளிகள் கிடைக்கும். தமிழக அரசு இதற்காக இரண்டு கோடி ரூபாய் செலவில் நுங்கம்பாக்கம் மைதானத்தை புதுப்பித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறும் அடுத்த சர்வதேச தொடராக இந்த Chennai Open 2022 – WTA 250.