சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்த சாலைப் பாதுகாப்பு குறித்த விளம்பர வீடியோவையும், அதைத் தொடர்ந்து “6 ஏர்பேக்குகள் கொண்ட வாகனத்தில் பயணம் செய்வதன் மூலம் வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக்குங்கள்” எனவும் பதிவிட்டிருக்கிறார்.
அந்த கார் விளம்பரத்தில், திருமணத்திற்குப் பிறகு தனது மகளை கணவன் வீட்டுக்கு அனுப்பும் தந்தை அழுது கொண்டிருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அக்ஷய் குமார், மணமகனையும், மணமகளையும் 2 ஏர்பேக்குகளுடைய காரில் அனுப்பும் தந்தையின் அருகில் நின்று கேலி செய்வதைப் போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு 6 ஏர் பேக்குகள் இருக்கும் காரில் அந்த புதுமணத் தம்பதிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடு தழுவிய தேசிய சாலை பாதுகாப்பு பிரசாரத்திற்கு அக்ஷய் குமாரின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து, ‘சாலை பாதுகாப்பு பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதில் நடிகர் அக்ஷய் குமாரின் முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. இந்தியாவில் சாலை விபத்துகளை குறைத்து , மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்’ என்றும் பதிவிட்டிருந்தார். நிதின் கட்கரி-யின் ட்விட்டர் பதிவுக்கு பிறகு, பலர் அந்த விளம்பரம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைக்க்கிறார்கள்.
இது தொடர்பாக சிவசேனா ராஜ்யசபா எம்.பி பிரியங்கா சதுர்வேதி, நிதின் கட்கரியின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, “இந்த விளம்பரம், கார் பாதுகாப்பிற்காகவா? அல்லது வரதட்சணையை ஊக்குவிக்க அரசாங்கம் பணத்தை செலவிடுகிறதா? இது மிகவும் சிக்கலான விளம்பரம். இதுபோன்ற படைப்புகளை யாரும் கடந்து செல்லமுடியாது. காரின் பாதுகாப்பு அம்சத்தை விளம்பரப்படுத்த அரசு பணம் செலவழிக்கிறதா அல்லது இந்த விளம்பரத்தின் மூலம் வரதட்சணை என்ற தீய குற்றச் செயலை விளம்பரப்படுத்துகிறதா?” என்று பதிவிட்டிருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலேவும் இந்த விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக, “இந்திய அரசு வரதட்சணையை அதிகாரப்பூர்வமாக ஊக்குவிப்பதைப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.