அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்தது செல்லும்: உச்ச நீதிமன்றம்

எடப்பாடி கே. பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம்

Getty Images

எடப்பாடி கே. பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இன்று உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திர சூட், ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட முறையீட்டு வழக்கின் விசாரணை நடைபெற்றது.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.

“வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை”

அப்போது அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அதிமுக அலுவலகத்தை மூடி சீல் வைத்த வருவாய் கோட்டாச்சியர் நடவடிக்கையை ரத்து செய்தும் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக தலைமை அலுவலக சாவியை ஒப்படைக்க கூறியும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு செல்லும் என்று அறிவித்தனர்.

மேலும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 145ன் படி, ஒரு கட்சி அலுவலகத்துக்கு சீல் வைப்பதற்கு வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.


இதுமட்டுமின்றி, வரும் நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடரப்பட்டால் அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, அதிமுக பொதுக் குழு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கிலும் இந்த தீர்ப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.


சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டது என்ன?

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த கோட்டாட்சியர்

BBC

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த கோட்டாட்சியர்

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஜூலை 11ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதே கூட்டத்தில் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். முன்னதாக, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு தமது ஆதரவாளர்களோடு ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.

பூட்டியிருந்த அலுவலகத்தை அவரது ஆதரவாளர்கள் உடைத்துத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கே இருந்த எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது அந்த இடம் போர்க்களம் போலக் காட்சி அளித்த நிலையில், அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அலுவலகத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு கதவைப்பூட்டி சீல் வைத்தார்கள் அரசு அலுவலர்கள். இதையடுத்து அலுவலகத்துக்கு உரிமை கோரி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரண்டு தரப்பும் நீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கில், சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில்தான்தான் இன்று திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


https://www.youtube.com/watch?v=QMukZ2FvOoY

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.