சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் உட்கட்சி தேர்தலை எதிர்த்து, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் பழனிசாமி ஆகியோர் உரிமையியல் வழக்கு தொடர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்டதிட்ட விதிகளுக்கு எதிரானது” என்று கோரியிருந்தனர். இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சார்பிலும் பதில்மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வேல்முருகன், அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு எதிராக மனுதாரர்கள், ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் வழக்கு தொடர அனுமதியளித்து கடந்த ஏப்ரல் 26-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ” மனுதாரர்கள் இருவரும் அதிமுக உறுப்பினர்கள் இல்லை. குறிப்பாக மனுதாரர் ராம்குமார் ஆதித்தனின் கட்சி உறுப்பினர் அட்டை கடந்த 2019-ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டது. எனவே மனுதாரர்கள் அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக் கோரி தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.