தமிழக அரசு ஊழியர்கள் பல காலமாய் போராடிக்கொண்டிருந்த ஒரு பிரச்னைக்கு முதல்வர் ஸ்டாலின் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்திவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆனால், இந்த விஷயத்தில் முடிவெடுக்க தமிழக அரசு தயக்கம் காட்டிவந்தது. அதற்கு காரணம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் சமீபத்தில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒருங்கிணைத்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது பேசியவர் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும், அதில் கூறியிருந்த பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்றும் வாக்குறுதியையும் உடனடியாக அமல்படுத்துவோம் என்று உறுதி அளித்துள்ளார்.
அவர் பேசுகையில் கூறியதாவது ”அரசு ஊழியர்கள் என்ன குறைகள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் முறையிடலாம். அவர்கள் உங்களுடன் நட்போடு அணுகுவார்கள்.
அவர்களிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கை உறுதியாக என்னுடைய கவனத்திற்கு வந்து சேரும். அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும்.
உங்களுடைய நம்பிக்கைக்கு நான் என்றைக்கும் பாத்திரமாக இருப்பேன். அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம். உங்களுடைய நம்பிக்கை நிச்சயம் வீண்போகாது. எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் உங்களுக்காக, பல திட்டங்களைத் தீட்டி, உங்கள் வாழ்விலே வசந்தத்தை ஏற்படுத்தினாரோ அதை நானும் காப்பாற்றுவேன்” என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக கொடுத்த உறுதி அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் எப்போது இந்த வாக்குறுதி நிறைவேறுமா? என்ற கேள்வியும் அவர்களிடையே எழுந்துள்ளது.