சென்னை: நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்களுக்கான ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், அமைச்சர் மெய்யநாதனை ‘ஸ்போர்ட்ஸ் நாதன்’ என புகழ்ந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சந்தேகங்களை கேட்டறிவதற்காக ஆடுகளம் தகவல் மையத்தை தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி மூலம் கேட்டறிய இந்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டு போட்டிக்கான இணையதள பதிவையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக இந்த நேரு விளையாட்டு அரங்கிற்கு நான் வந்துள்ளேன். இதில் இருந்தே விளையாட்டு துறை எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம். அமைச்சர் மெய்யநாதன் ‘ஸ்போர்ட்ஸ் நாதன்’ ஆகவே மாறிவிட்டார். சுறு சுறுப்பான அமைச்சர் கிடைத்ததற்கு பெருமை பட வேண்டும் என புகழாரம் சூட்டினார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதன்படி, 1,130 வீரர்கள், வீராங்களைகளுக்கு காசோலைகள், விருதுகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 16 கோடியே 28 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். அத்துடன் 19 வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு விருதினையும், அதற்கான ஊக்கத்தொகையாக 16 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கி வாழ்த்தினார்.
மேலும், 2018-19-20 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுத் தொகையை வழங்கினார்.