மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ளதால்
காங்கிரஸ்
கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார் ராகுல் காந்தி.
நாடு முழுவதும் மக்களை ஈர்க்கும் வகையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். பாரத் ஜூடோ யாத்திரை என்று கூறப்படும் ஒற்றுமையின் யாத்திரையை மேற்கொண்டுள்ள நிலையில் பாஜகவினர் இது குறித்து விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
நடை பயணத்தில் விலையுயர்ந்த சொகுசு கேரவன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது பாஜக. அதன் பின்னர் ராகுல் காந்தி அணிந்துள்ள டி ஷர்ட் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை கொண்டது என விமர்சிக்கப்பட்டது.
ஓபிஎஸ்ஸுக்கு சீனியர்கள் கொடுத்த ஏமாற்றம்: கடைசியில் இதுவும் நடக்கல!
நடைபயணம் குறித்த செய்திகள் போய் சேர்வதை விட பாஜகவின் விமர்சனம் அதிகளவில் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளை காத்திரமாக விமர்சிக்க தொடங்கியுள்ளது. ஆர்எஸ்எஸ்காரர்கள் அணியும் காக்கி வண்ண டவுசர் படத்தை போட்டு அதில் தீ வைக்கப்பட்டுள்ளது போல் ஒரு புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர் காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. பல மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளுக்கு சென்றனர். பாஜகவுக்கு எதிராக, பாஜக அரசின் திட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் வலுவான விவாதங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதால் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையை காங்கிரஸ் செய்தால் தான் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். காங்கிரஸின் மேற்சொன்ன புகைப்பட விமர்சனம் அதற்கான பணியில் தாங்கள் ஈடுபடத் தொடங்கிவிட்டோம் என்பதை காட்டுவதாக உள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.