பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பெய்து வரும் கன மழையால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், நேற்றைய நிலவரபடி அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் வரத்து அதிகரிப்பால் அதே அளவு தண்ணீர் உபரியாக திறக்கப்படுவது தொடர்கிறது.
இதனால், ஆழியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, மயிலாடுதுறை, சுப்பேகவுண்டன்புதூர் உள்ளிட்ட இடங்களில் ஆற்றை கடக்க போடப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தை தொட்டு தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றில் இறங்கி குளிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், கன மழையால் தரைமட்ட பாலம் எந்த நேரத்திலும் தண்ணீரில் மூழ்கலாம் என்பதால், தரைமட்ட பாலத்தில் வாகனங்களில் கடந்து செல்வதை தவிர்க்க போலீசார் ஆங்காங்கே எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர்.
மிகவும் தாழ்வான தரைமட்ட பாலத்தில், போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு மாற்றுபாதையில் இயக்கப்படுகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.