பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி காலமானார். ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத் மறைவையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடிசூடிக் கொண்டுள்ளார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத்தின் உடல் வரும் 19ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மறைந்த ராணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன்படி, 1986ஆம் ஆண்டில் அவர் எழுதிய ரகசிய கடிதம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னி மக்களுக்கு அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தை 2085ஆம் ஆண்டுதான் பிரித்து பார்க்க முடியும்.
இரண்டாம் எலிசபெத்தின் எள்ளுப்பாட்டியான மறைந்த விக்டோரியா மகாராணியின் வைரவிழாவை முன்னிட்டு சிட்னியில் விக்டோரியா மகாராணி கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடம் 1986ஆம் ஆண்டு புணரமைக்கப்பட்டது. அப்போதுதான், அந்த கடிதத்தை ராணி இரண்டாம் எலிசபெத் எழுதியுள்ளார். அதில் அவரது கையெழுத்தும் போடப்பட்டுள்ளது. சிட்னி மேயருக்கு எழுதப்பட்டுள்ள அக்கடிதம், விக்டோரியா மகாராணி கட்டத்தின் மேல் அறையில் உள்ள கண்ணாடி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
2085 ஆம் ஆண்டில் பொருத்தமான தினத்தில் அந்த கடிதத்தின் உறையை பிரித்து சிட்னி நகர மக்களுக்கு தனது செய்தியை தெரிவிக்குமாறு எலிசபெத் கூறியுள்ளார். காமன்வெல்த் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவுக்கும் அவர்தான் ராணி என்பதால், அவரது வார்த்தைகள் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால், அந்த கடிதத்தின் ரகசியம் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது. கடிதத்தில் அவர் என்ன எழுதியுள்ளார் என்பது அவரது தனிப்பட்ட உதவியாளருக்கும்கூட தெரியாது. அந்த அளவுக்கு ரகசியமான கடிதம் என்பதால், அதில் என்ன செய்தி இடம்பெற்றிருக்கிறது என்பதை அறிய சிட்னி மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
பிரிட்டன் ராணி இறுதிசடங்கு செலவு எவ்வளவு தெரியுமா..? – பிரிட்டன் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள்..!
சிட்னியில் 2000ஆம் ஆண்டில் பிறந்த ஒருவருக்கு அக்கடிதத்தில் ராணி இரண்டாம் எலிசபெத் என்ன எழுதியிருக்கிறார் என தெரிய வரும்போது அவருக்கு 85 வயதாகியிருக்கும். ராணி மறைந்த ஆண்டான 2022ஆம் ஆண்டி பிறந்த ஒருவருக்கு அக்கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் தகவல் தெரிய வரும்போது, அவருக்கு 63 வயதாகியிருக்கும். அதாவது, அடுத்த 63 ஆண்டுகளுக்கு அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கும்.