திருப்போரூர்: திருப்போரூரில் இன்று காலை திருமணம் நடக்கவிருந்த நிலையில், கடந்த 9ம் தேதி சாலை தடுப்பில் பைக் மோதியதில் மணமகன் படுகாயம் அடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11 மணியளவில் மணமகனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். இதனால் அவரது உடலை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு, அண்ணா நகரை சேர்ந்தவர் கஜேந்திரன்-கலா தம்பதி. இவர்களின் மகன் ராஜ் (32). இவர், திருப்போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் மின் பராமரிப்பு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கும் கடலூர் அருகே சிதம்பரத்தை சேர்ந்த சுமார் 25 வயதான ஒரு பெண்ணுக்கும் இன்று (12ம் தேதி) காலை திருப்போரூர் அருகே ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக இருதரப்பு வீட்டினரும் உறவினர்களுக்கு பத்திரிகை அளித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி தன்னுடன் கல்லூரியில் வேலை பார்ப்பவர்களுக்கு திருமண பத்திரிகை வழங்க பைக்கில் ராஜ் சென்றிருந்தார். பின்னர் அனைவருக்கும் பத்திரிகை கொடுத்துவிட்டு பைக்கில் திரும்பியபோது, கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்ற யோவான் என்பவரின் பைக் வேகமாக மோதியது.
இதில் நிலைதடுமாறிய ராஜின் பைக், சாலை நடுவே இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் ராஜுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் பெற்றோர் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு 11 மணியளவில் மணமகன் ராஜுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மூளைச்சாவு ஏற்பட்ட ராஜின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்போரூர் போலீசார் விரைந்து சென்று, பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதும் உடலை ஒப்படைப்பதாக உறவினர்களிடம் தெரிவித்தனர். மேலும், இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் மருத்துவமனையில் உறவினர்களிடையே சோகம் நிலவியது.