சென்னை: சிவகுமார் தனது கல்வி அறக்கட்டளை மூலம் ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து வருகிறார்.
கடந்த 43 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த நிகழ்வின் மூலம் பல ஏழை மாணவர்கள், மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துஜ்கொண்ட நடிகர் கார்த்தி, கிராம பள்ளிகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளார்.
ஸ்ரீ சிவக்குமார் அறக்கட்டளை
100-வது படத்தின் போது மாணவர்களை ஊக்கப்படுத்த தனது பெயரில் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் நடிகர் சிவகுமார். தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான, சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 43-ம் ஆண்டு நிகழ்வு, சென்னை நுங்கம்பாக்கம் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆஃப் மெட்ராஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. மேலும், திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான தாய்தமிழ் பள்ளிக்கு ஒரு லட்சமும், மூத்த ஓவியக் கலைஞர் ராமுவிற்கு 50 ஆயிரமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி
இந்த நிகழ்ச்சியில், நடிகரும் சிவகுமாரின் மகனுமான கார்த்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “அகரம் பவுண்டேஷன் கல்வி பணிகளுக்கான விதை 43 ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டது. ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 43 ஆண்டுகளாக இளம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருவதன் தொடர்ச்சியே அகரம். நல்ல கல்வி அறிவும் நற்சிந்தனைகளும் சமூக பொறுப்புகளும் நிறைந்த இளம் வயதினரை உருவாக்குவதன் மூலம் சமூக குறைபாடுகளை காலப்போக்கில் களைய முடியும். இளம் மனங்களை கட்டமைப்பதில் கல்வி முக்கியப் பங்காற்றுகிறது என்பதை அகரம் பணிகளில் மூலம் அறிந்திருக்கிறோம்” என்றார்.
4750 மாணவ மாணவிகளுக்கு கல்வி
தொடர்ந்து பேசிய கார்த்தி, “அகரம் விதைத் திட்டம் கடந்த 13 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 750 மாணவ மாணவியர்க்கு கல்வி வாய்ப்பை வழங்கியுள்ளது. அகரம் தொடங்கப்பட்ட பொழுதும்; விதைத் திட்டத்தின் பதிமூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய பொழுதும் ஒவ்வொரு பணிகளில் உச்சபட்ச வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கிறோம். கல்வியின் மூலம் நிரந்தர, நீடித்த மாற்றங்கள் உருவாக்க முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறது அகரம்” என தெரிவித்தார்.
மலை கிராம பள்ளிகள் தொடக்கம்
மேலும், “எளிய மனிதர்களுக்கான கல்வி கனவை நிறைவேற்றுவதில் அரசுப் பள்ளிகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது. சமூகத்தின் பல்வேறு தளங்களில் பணியாற்றும் நம்மில் பெரும்பாலானோர் பொதுப் பள்ளிகளில் படித்தவர்களாக இருக்கக்கூடும். இன்றும் பொதுப் பள்ளிகள் தான் விளிம்புநிலை மக்கள் கல்வி பெற ஒரே ஆதாரமாக இருக்கிறது. பொதுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து அந்தந்த பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பணியாற்ற ‘இணை’ அமைப்பு வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலாற்றி வருகிறோம்” எனக் கூறினார்.
கிராம பள்ளிகளில் சாதி பாகுபாடு
தொடர்ந்து பேசிய கார்த்தி, “கற்பித்தல் கற்றல் அப்படிங்குறது அறிவுக்காகன்னு நினைத்தால் தான் மாறும். ஆனால் இங்க மார்க் அடிப்படையில தான் எல்லாமே நடக்குது. சிவக்குமார் கல்வி அறக்கட்டளையும் அப்படித்தான் போய்ட்டு இருந்தது. அகரம் வந்த பின்னர் தான் தெரிஞ்சுது, இங்க மார்க்க விட எந்த இடத்துல இருந்து வந்து மார்க் வாங்குறாங்குறது தான் ரொம்ப முக்கியமா இருக்கு. அகரம்ல படிக்குற தம்பி, தங்கைகள் ஆறு கிலோ மீட்டர் ஏழு கிலோ மீட்டர் மலை மேல இருந்து நடந்து வரணும். ஈவ்னிங்ல ஸ்பெஷல் கிளாஸ் அட்டெண்ட் பண்ணிட்டு போனா அங்க மிருகங்கள் இருக்கும் போக முடியாது. அப்போ யாராவது வீட்ல வாசல்ல படுத்துக்கணும். அங்க இருந்து வர்ற ஒரு பையன் ஐம்பது மார்க் வாங்குறது பெரிய விசயமா இல்ல இந்த மாதிரி ஏசி ரூம்ல உக்காந்துட்டு நூறு மார்க் வாங்குறது பெரிய விசயமான்னு பார்த்தா அதுதான் ரொம்ப ரொம்ப பெரிய விஷயமா தோணுது” என தனது கருத்துகளை தெரிவித்தார்.